கோலாலம்பூர்: உலக சுகாதார அமைப்பிலிருந்து, இதுவரை எந்த உத்தரவும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள் தொடரப்படும் என்று டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
கொரொனாவைரஸ் பாதிப்புகள் பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும் பெரிய அளவிலான நிகழ்வுகள் வழக்கம் போல் தொடரலாம் என்று துணைப் பிரதமர் கூறினார்.
“நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். பெரிய கூட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு சொன்னால், நாங்கள் அறிக்கைகள் அல்லது உத்தரவுகளை வெளியிடுவோம்,” என்று நேற்று புதன்கிழமை (ஜனவரி 29) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
உள்ளூர் மற்றும் அனைத்துலக பார்வையாளர்கள் ஒன்று கூடும் பத்து மலை தைப்பூசக் கொண்டாட்டத்தை குறித்து வினவிய போது அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
கொரொனாவைரஸ் பாதிப்புகள் தற்போதைக்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும், பொய்யான அல்லது போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக நேற்றுடன் நாட்டில் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்ததை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சீன நாட்டைச் சார்ந்தவர்களாவர்.