கோலாலம்பூர் – மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்குத்தான் உண்டு என்றாலும், எந்த நபருக்கு அல்லது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் சட்டம் விவரிக்கிறது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) மகாதீர், அஸ்மின் தலைமையில் தேசிய முன்னணி, பெர்சாத்து, பாஸ், ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக், சபா மாநிலத்தின் வாரிசான் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மாமன்னர் சுல்தான் அப்துல்லாவைச் சந்தித்துள்ளனர்.
புதிய அரசாங்கத்திற்கு உடனடியாக அனுமதி அளிக்காத மாமன்னர், தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தங்களிடம் தெரிவித்ததாக அஸ்மின் அலி நேற்று ஆதரவாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.
2018 பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆதரவைக் கொச்சைப் படுத்தும் விதத்தில், அவமானப்படுத்தும் விதத்தில்,
அம்னோ போன்ற எந்த கட்சிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஆட்சிக்கு வந்தார்களோ, அவர்களுடனே சேர்ந்து மகாதீர் பின்கதவு வழியாக தான் பிரதமராகத் தொடர புதிய அரசாங்கத்தை அமைக்க முனைந்திருப்பது மக்களிடையே பலத்த கண்டனங்களையும், எதிர்ப்பையும் தோற்றுவித்துள்ளது.
அன்வாரோடு கொண்டிருக்கும் அரசியல் பகைமையைப் பயன்படுத்தி பிகேஆர் கட்சியை இரண்டாக உடைத்து வெளியேறி, மகாதீரோடு இணைந்து இந்தப் “பின்கதவு” அரசாங்கத்தை அமைக்க அஸ்மின் முக்கியப் பங்காற்றியிருப்பதால் அவர் மீதும் மக்களின் வெறுப்பலைகள் வளர்ந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
இந்நிலையில் மாமன்னர் புதிய அரசாங்கத்தை மகாதீர் அமைப்பதற்கு அனுமதி அளிப்பாரா அல்லது நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜனநாயகப் படுகொலைக்கு மாமன்னரும் உடன்பட்டு, மக்களின் எதிர்ப்பை ஈட்டுவாரா அல்லது நடுநிலையோடும், சட்டப்படியும் சிந்தித்து, தகுந்த சட்ட ஆலோசனை பெற்று, மக்கள் விரோத அரசு ஒன்று அமையாமல் தடுக்க மீண்டும் பொதுத் தேர்தலுக்கு வழிவிடுவாரா என அறிந்து கொள்ள நாடே காத்திருக்கிறது!
அப்படியே, தற்போது இணைந்துள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் பொதுத் தேர்தல் களத்திலும் மீண்டும் கரங்கோர்த்து மக்களின் ஆதரவைச் சந்திக்க முன்வந்தால் – வாக்காளர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தால் – அந்தப் பொதுத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றால், மலேசியர்கள் அனைவருமே அந்த ஜனநாயக முடிவை வரவேற்பார்கள் – ஏற்றுக் கொள்வார்கள்!
அதுவே, மாமன்னர் செய்யக் கூடிய சிறந்த முடிவாக இருக்கும்! செய்வாரா, மரியாதைக்குரிய மாமன்னர்?