Home One Line P2 20 பில்லியன் ரிங்கிட் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – வணிகங்களின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் என்ன?

20 பில்லியன் ரிங்கிட் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் – வணிகங்களின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் என்ன?

589
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – துன் மகாதீரின் இடைக்காலப் பிரதமர் நியமனம் சட்டபூர்வமாக செல்லுமா – என அவரது நியமனமே கேள்விக் குறியாகி இருக்கும் நிலையில் – 20 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை, கொவிட்-19 பாதிப்புகள் தொடர்பில் அவரே அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பும் செல்லாது என்ற சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், இருப்பினும் அந்தத் திட்டத்தில் வணிகங்களுக்கும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் காணப்படும் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

  • பேங்க் சிம்பானான் நேஷனல் என்ற தேசிய சேமிப்பு வங்கி, 4 விழுக்காடு வட்டி விழுக்காட்டில் 200 மில்லியன் ரிங்கிட் சிறுகடன்களை வழங்குகிறது.
  • மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தனது விமான நிலையங்களில் வாடகைக்கு இருக்கும் வணிகங்களின் வாடகைகளைக் குறைக்கும். விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டணங்களையும், விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான கட்டணங்களையும் குறைக்கும்.
  • சுற்றுலாத் துறை தொடர்புடைய நிறுவனங்கள் மாதந்தோறும் செலுத்தும் தொகைகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
  • சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு 3.75 வட்டி விழுக்காட்டில் 2 பில்லியன் ரிங்கிட் உத்தரவாத நிதி உதவியை பேங்க் நெகாரா எனப்படும் தேசிய வங்கி வழங்கும்.
  • கடன் பெற்றவர்களின் நிதிச் சுமைகளைக் குறைக்கும் வண்ணம் அவர்களுக்கான மாதக் கட்டணங்கள் ஒத்திவைக்கப்படும் என்பதோடு, கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் காலகட்டம் மாற்றியமைக்கப்படும்.
  • தங்கும் விடுதிகள், சுற்றுலா முகவர்கள், விமான நிறுவனங்கள், பேரங்காடிகள் ஆகியவற்றுக்கான மின்சாரக் கட்டணம் அடுத்த ஆறுமாதங்களுக்கு 15 விழுக்காடு குறைக்கப்படும்.
  • மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை சேவை வரிகளை தங்கும் விடுதிகள் செலுத்த வேண்டியதில்லை என்ற சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

  • இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்திற்கு தற்போது தொழிலாளர்கள் சார்பில் செலுத்தப்படுகிற குறைந்த பட்ச சம்பளப் பிடித்தம் 11 விழுக்காடாக இருக்கிறது. இது இனி 4 விழுக்காடு குறைக்கப்பட்டு 7 விழுக்காடாக ஏப்ரல் 1 2020 முதல் டிசம்பர் 31 2020 வரை இருந்து வரும். இதன் மூலம் சுமார் 10 பில்லியன் ரிங்கிட் வரையிலான நிதி தனிநபர்களின் செலவுகளுக்காக சந்தையில் உலவ முடியும். தங்களின் சம்பளப் பிடித்தத்தை 11 விழுக்காடாகவே வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் அவ்வாறே வைத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
  • எதிர்வரும் மே 2020-இல் வழங்கப்படவிருந்த பந்துவான் சாரா ஹிடுப் என்ற மக்களுக்கான 200 ரிங்கிட் உதவித் தொகை முன்கூட்டியே மார்ச் 2020-இல் வழங்கப்படும். மே 2020-இல் மேலும் கூடுதலாக 100 ரிங்கிட் வழங்கப்படும். அதன் பின்னர் இன்னொரு 50 ரிங்கிட் இ-துனாய் (e-tunai) எனப்படும் மின்னிலக்க உதவி நிதியாக வழங்கப்படும்.
  • உள்நாட்டு வணிகர்கள் இணையத் தளங்களின் வழியான தங்களின் பொருட்களை விற்பனை செய்ய அவர்களுக்கு 1,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை மானியங்கள் வழங்கப்படும்.
#TamilSchoolmychoice

  • அடுத்த ஓராண்டுக்கு மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட முன்வரும் நிறுவனங்களுக்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கான கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். கோலாலம்பூர் மையப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் 500 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான முதலீட்டைக் கொண்ட நிறுவனங்களுக்கும் இதே சலுகை வழங்கப்படும்.
  • துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்நாட்டில் வாங்கப்படும்போதும், இறக்குமதி செய்யப்படும்போதும், விதிக்கப்படும் இறக்குமதி வரி மற்றும் விற்பனை வரி 1 ஏப்ரல் 2020 தொடங்கி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படுகிறது.
  • இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மையப் புள்ளியான கொவிட் 19 நோய் சிகிச்சைப் பணிகளில் நேரடியாக ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு ரொக்கமாக மாதத்திற்கு 400 ரிங்கிட் கூடுதல் பணம்  வழங்கப்படும்.
  • வாடகைக் கார் ஓட்டுநர்கள், சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டி முகவர்கள், பதிவு செய்யப்பட்ட மூன்று சக்கர (ரிக்‌ஷா) வண்டிகளின் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு ஒரே ஒருமுறை உதவி நிதியாக 600 ரிங்கிட் வழங்கப்படும்.

  • கொவிட் 19 பிரச்சனை தீரும்வரை குடிநுழைவு மற்றும் தொடர்புடைய முகப்பிட பணியாளர்களுக்கு (frontline staff) பிப்ரவரி 2020 தொடங்கி மாதம் 200 ரிங்கிட் வழங்கப்படும்.
  • உள்நாட்டு சுற்றுலாவுக்கென ஏற்படும் செலவினங்களுக்கு, தனிநபர் வருமான வரியிலிருந்து 1,000 ரிங்கிட் சலுகை விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சி பெறும்.
  • உள்நாட்டு விமானப் பயணங்கள், இரயில் பயணங்கள், தங்கும் விடுதிக் கட்டணங்கள் ஆகியவற்றுக்காக அனைத்து மலேசியர்களுக்கும் மின்னிலக்கப் பரிமாற்றத்தின் வழி, நபர் ஒருவருக்கு 100 ரிங்கிட் பற்றுச் சீட்டு சலுகை வழங்கப்படும்.
  • சுற்றுலாத் துறை நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டு நிதிக்கான (Human Resource Development Fund – HRDF)  கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • சுற்றுலா மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற துறைகளின் சுமார் 40 ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்க மனிதவள மேம்பாட்டு நிதிக்கு 100 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்படும்.
  • மின்னிலக்கத் துறைகளில் திறன்களை வளர்த்துக் கொள்ள குறுகிய கால பயிற்சிகளுக்காகவும், மற்றவகையான கூடுதல் திறன்பயிற்சிகளுக்காகவும் 100,000 மலேசியர்களுக்கு அதற்கான கல்விக் கட்டணத்திற்காக 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகிறது.
  • அரசாங்க இலாகாக்கள் தங்கும் விடுதிகளைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
  • விவசாய உணவு உற்பத்தி தொடர்புடைய வசதிகளுக்கு, உற்பத்தியைப் பெருக்கவும், உள்நாட்டுத் தேவைகள் மற்றும் ஏற்றுமதிகளுக்கான தேவைகளை அதிகரிக்கவும் 3.75 வட்டி விழுக்காட்டில் 1 பில்லியன் ரிங்கிட் கடன் வசதிகளை பேங்க் நெகாரா ஏற்படுத்தித் தரும்.
  • உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும், உணவுகளை கிடங்குகளில் பாதுகாத்து வைத்திருப்பதற்கும் ஃபாமா (Federal Agricultural Marketing Authority – Fama) எனப்படும் மத்திய விவசாய விற்பனை மையத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மறுசீரமைப்பு கட்டுமானங்களுக்காகவும், புதுப்பிக்கும் பணிகளுக்காகவும் நிறுவனங்களுக்கு 300,000 ரிங்கிட், அவர்களுக்கான வரியிலிருந்து குறைப்பு செய்யப்படும்.
  • மேற்குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு பொதுமான நிதிவசதி இருப்பதால் புதிதாக பாண்ட் (Bonds) எனப்படும் நீண்டகால கடன்பத்திரங்கள் எதனையும் அரசாங்கம் வெளியிடாது.

-தொகுப்பு : இரா.முத்தரசன்