Home One Line P1 திங்கட்கிழமை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்ட முடியாது – மக்களவைத் தலைவர் அதிரடி

திங்கட்கிழமை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்ட முடியாது – மக்களவைத் தலைவர் அதிரடி

760
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 2-ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என இடைக்காலப் பிரதமர் துன் மகாதீர் முகமட்டிடமிருந்து கடிதம் ஒன்றைப் பெற்றிருப்பதாகவும் இருப்பினும் சட்ட காரணங்களால் அத்தகையக் கூட்டம் நடைபெறாது என்றும் மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ முகமட் அரிப் பின் முகமட் யூசோப் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற விதிகளின்படி முறையான தீர்மானம் இன்றி அந்தக் கடிதம் எழுதப்பட்டிருப்பதால் அதை நிராகரிப்பதாகவும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

எந்தவொரு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் விதிகளின்படி மக்களவைத் தலைவர் என்ற முறையில் தான் கையெழுத்திட்ட அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் முகமட் அரிப் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அப்படியே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும், அத்தகைய முடிவு, அடுத்த பிரதமரை நியமிக்கும் மாமன்னரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதும் முடிவு செய்யப்படும் என்றும் முன்னாள் நீதிபதியான முகமட் அரிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, திங்கட்கிழமை மார்ச் 2-ஆம் தேதியன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் எதுவும் நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் முகமட் அரிப், தொடர்ந்து நாட்டின் அரசியல் நடப்புகளைத் தான் கண்காணித்து வரப் போவதாகவும், அதற்கேற்ப சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பு விடுக்கும் முடிவை எடுப்பேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.