கோலாலம்பூர்: உயர்கல்வி நிறுவனங்களில் இன்னமும் தங்கி இருக்கும் அனைத்து மாணவர்களின் நலனும் கவனிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் உறுதியளித்துள்ளார்.
“கவலைப்பட வேண்டாம், இன்னும் வளாகத்தில் இருக்கும் மாணவர்கள், அந்தந்த பல்கலைக்கழக வளாகங்களால் கவனிக்கப்படுவார்கள். பல்கலைக்கழகங்கள் அவர்களின் நிலை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து எப்போதும் அறிந்திருக்கின்றன.”
“அனைத்து மாணவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை உறுதிசெய்ய அமைச்சகம், பல்கலைக்கழக நிருவாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்கள் (மாணவர்கள்) படி படியாக நகர்வார்கள், ”என்று நேற்று திங்கட்கிழமை இரவு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் இருந்த மாணவர்கள் அந்தந்த சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“மாணவர்களுக்கு வழக்கம் போல் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.
நேற்று, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கும் 790 மாணவர்கள், ஒன்பது புறப்படும் மையங்களிலிருந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.