இன்னும் இவரது மேடை நிகழ்ச்சிகளுக்கென இலட்சக்கணக்கில் திரளும் இரசிகர்கள் உள்ளனர். மேடையில் இவரது ஆட்டமும் பாட்டமும் இரசிகர்களையும் துள்ளாட்டம் போட வைக்கும்.
ஏழை, பணக்காரன், அரச குடும்பத்தினர், பிரதமர்கள் என யாரையும் விட்டு வைக்காத கொவிட்-19 நச்சுயிரி அழகான மடோன்னாவையும் தாக்கியுள்ளது.
தனக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பதாக பரிசோதனையின் வழி கண்டறியப்பட்டிருப்பதாக மடோன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாகப் பதிவிட்டுள்ளார்.
“பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு உடலில் கொவிட்-19 பாதிப்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறேன்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்தார்.
“எனினும் நாளை காரில் நீண்ட பயணம் செல்லவிருக்கிறேன். கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டு வெளிக்காற்றை சுவாசிக்கவிருக்கிறேன். கொவிட்-19 காற்றை சுவாசிக்கவிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, கொவிட்-19 அனைவரும் சமம் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது என்றும் மடோன்னா பதிவிட்டிருந்தார்.
கொவிட்-19 தொற்று காரணமாக மடோன்னா பாரிஸ் நகரில் நடத்தவிருந்த இரண்டு பிரம்மாண்டமான மேடை இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
“மேடம் எக்ஸ்” (Madame X world tour) என்ற பெயரிலான தனது இசை நிகழ்ச்சியை அமெரிக்க நகர்களில் நடத்தி முடித்த அவர் வெளிநாடுகளில் அந்த இசை நிகழ்ச்சியைத் தொடரவிருந்த வேளையில் கொவிட்-19 பாதிப்பால் அந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.