கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இல்லாதது கேள்விகளை எழுப்பியது. ஆனால், இது கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல் என்று கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் கூறினார்.
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அன்வார் ஆகியோருக்கு அவரவர் தொகுதிகளில் பணிகள் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையுடன் சந்திப்பு இருந்ததால், கடைசி நிமிடத்தில் அழைக்கப்பட்ட இந்த சந்திப்புக்கு வர இயலவில்லை என்று அவர் கூறினார்.
“அன்வார் நேற்று டி நியூயார்க் டைம்ஸுடன் ஒரு நேர்காணலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து விலக்கிக் கொள்ளவில்லை.”
“இது (பத்திரிகையாளர் சந்திப்பு) முன்பே திட்டமிடப்படவில்லை. எனவே, பல பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோன்பு பெருநாள் ஏற்பாடுகள் மற்றும் கொவிட் -19 உதவிகளுக்கு உதவ அந்தந்த தொகுதிகளுக்குத் திரும்புவதற்கான திட்டங்களை ஏற்கனவே செய்துள்ளனர்” என்று பாஹ்மி கூறினார்.
முன்னதாக, மலேசியாகினி ஓர் அநாமதேய பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரை மேற்கோள் காட்டி, அன்வார் பத்திரிகையாளர் சந்திப்பில் சேர விரும்பவில்லை, ஏனெனில் அவர் டாக்டர் மகாதீரால் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்று கூறியிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்ற அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை என்று கூறி, பாஹ்மி அந்த அறிக்கையை மறுத்தார்.