Home One Line P1 பெர்சாத்து உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் சட்டப் போராட்டம்

பெர்சாத்து உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் சட்டப் போராட்டம்

602
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியில் தனது உறுப்பியத்தை மகாதீர் இழந்துவிட்டதாக அந்தக் கட்சியின் மொகிதின் தரப்பு தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் நேற்று வெள்ளிக்கிழமை (மே 29) அறிவித்தார். இந்த முடிவுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை மகாதீர் தொடங்கியுள்ளார்.

முதல் கட்டமாக மகாதீரின் வழக்கறிஞர் ஹானிப் கத்ரி சங்கப் பதிவிலாகாவுக்கு மேல் முறையீடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

மே 28 தேதியிட்ட கடிதத்தின் வழி பெர்சாத்து கட்சி எடுத்திருக்கும் முடிவு சங்கங்களுக்கான சட்டங்களுக்குப் புறம்பானது என்றும் வாதிட்டிருக்கிறார் ஹானிப் கத்ரி. பெர்சாத்து கட்சியின் கடிதம் அதன் அமைப்புச் செயலாளர் முகமட் சுகைமி யாஹ்யாவால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தானே இன்னும் பெர்சாத்து கட்சியின் அதிகாரபூர்வ அவைத் தலைவர் என்று தொடர்ந்து மகாதீர் கூறி வருகிறார். அதற்கேற்ப நேற்று வெள்ளிக்கிழமை பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தை “ஆக்கிரமித்து” அங்கிருந்து தனது பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினார்.

நாடாளுமன்றத்தில் மே 18-ஆம் தேதியன்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்ததற்காக இயல்பாகவே கட்சியின் உறுப்பியத்தை இழந்து விட்டனர் என மகாதீரோடு சேர்த்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்தக் கடிதங்கள் செல்லாது, சட்டபூர்வமானவை அல்ல என்கிறார் வழக்கறிஞர் ஹானிப் கத்ரி.

பெர்சாத்து கட்சியில் அமைப்புச் செயலாளர் என்ற ஒரு பதவியே இல்லை, கட்சியின் சட்டவிதிகளிலும் அந்தப் பதவி குறிப்பிடப்படவில்லை என்பதால், அந்தக் கடிதங்கள் செல்லாது என்றும் ஹனிப் மேலும் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் மகாதீர் தரப்பு தலைப்புச் செயலாளரான மார்சுகி யாஹ்யா மகாதீருக்குக் கடிதம் அனுப்பிய அமைப்புச் செயலாளர் முகமட் சுகைமி யாஹ்யாவை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கடிதப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து மொகிதின் அணி, மகாதீர் அணி, சங்கப் பதிவிலாகா என ஒரு முக்கோண சட்டப் போராட்டம் தொடங்கியிருக்கிறது.

இறுதியில் வெற்றி யாருக்குக் கிடைக்கும்?

கட்சியை எந்த அணி கைப்பற்றப் போகிறது?

அல்லது சட்டப் போராட்ட இழுபறியினால் பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டே போகுமா?

கட்சிப் பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு முன்பே மகாதீர்-அன்வார் கூட்டணி பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?

இப்படியாக பலப்பல கேள்விகளை உள்ளடக்கியிருக்கிறது பெர்சாத்து கட்சியில் தொடங்கியிருக்கும் சட்டப் போராட்டங்கள்!