கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் பகுதி உறுப்பினர்களிடமிருந்து 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்து இருக்கிறது.
இந்தப் பணம் கட்சிக்கு சொந்தமான பணம் என்றும் நம்பப்படுகிறது
சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சாதிக் தனது இல்லத்திலிருந்து 250 ஆயிரம் ரிங்கிட் காணாமல் போனதாக புகார் செய்திருந்தார். சைட் சாதிக் பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதி உறுப்பினருமாவார்.
அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை, இளைஞர் பகுதியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களிடம் கோலாலம்பூரில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக அறிவித்திருக்கிறது.
மேலும் 100,000 ரிங்கிட் மதிப்புடைய கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
தவறான முறையில் கையாடல் செய்யப்பட்ட பணத்திலிருந்து இந்த கார் வாங்கப்பட்டிருப்பதா நம்பப்படுகிறது.
துன் மகாதீர் அணியில் இணைந்திருக்கும் இளைஞர் பகுதி உறுப்பினர்களை நடப்பிலிருக்கும் தேசிய கூட்டணி அரசாங்கம் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் மிரட்டுவதாகவும் பழி வாங்குவதாகவும் ஏற்கனவே பெர்சாத்து இளைஞர் பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்
எனினும் இது குறித்து அறிவித்த ஊழல் தடுப்பு ஆணையம் தங்களின் நடவடிக்கைகளில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் சைட் சாதிக்கின் புகார் மீதான நடவடிக்கைகளையே தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்
இதற்கிடையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை குறித்து கருத்துரைத்த பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியினர் இந்தப் பணம் கட்சிக்கு சொந்தமான பணம் என்று கூறியிருக்கின்றனர். அண்மையில் கொண்டாடப்பட்ட ஹரிராயா நோன்புப் பெருநாள், விரைவில் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா ஹாஜி போன்றவற்றுக்காக செலவிட வைக்கப்பட்டிருந்த பணம் அந்த 600,000 ரிங்கிட் என்று அவர்கள் தெரிவித்தனர்
நிதி உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவுவதற்காக அந்த பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, முன்கூட்டியே இந்த பணம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது.