கோலாலம்பூர்: சரவாக் கூச்சிங்கில் ஒரு தங்கும் விடுதியை வாங்கியது தொடர்பாக நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஈசா அப்துல் சமாட்டை உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) விடுவித்தது.
இருப்பினும், அந்த தங்கும் விடுதியை வாங்கியது தொடர்பாக இலஞ்சம் பெற்ற ஒன்பது குற்றச்சாட்டுகளுக்கு அவர் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி, ஆகஸ்ட் 17, 18, 19 ஆகிய தேதிகளில் இந்த விசாரணைக்கான தேதியை நிர்ணயித்தார்.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, சாட்சியம் அளிக்க 22 சாட்சிகளுடன் 15 நாள் விசாரணைக்கு பின்னர் அரசு தரப்பு தனது வழக்கை முடித்தது.
எப்ஐசிஎஸ்பி மெர்டேகா பேலஸ் ஹோட்டல் மற்றும் சூட்ஸை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததன் பேரில், 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதியன்று, முகமட் ஈசா நம்பிக்கை மோசடி மற்றும் 3 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றக் குற்றத்தினை மறுத்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409-இன் கீழ், 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதியன்று, பெல்டா கட்டத்தின் 50-வது மாடியில் நம்பிக்கை மோசடி குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஊழலுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் அதே ஆண்டில் ஏப்ரல் 29 முதல் 2015, டிசம்பர் 15- க்கு இடையில் 49-வது மாடியில் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.