கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யாரென்பதை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இது குறித்து பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) முன்னாள் பிரதமர் துன் மகாதீர், அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் பிகேஆர் கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
அந்த சந்திப்பைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாஹ்மி. “கடவுள் விருப்பமிருந்தால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான பிரதமர் யார் என்பதை நாங்கள் அறிவிப்போம்.” என்று தெரிவித்திருக்கின்றார்.
நம்பிக்கை கூட்டணி இரண்டு வெவ்வேறு விதமான முடிவுகளை எடுக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்
முதலாவது முடிவு, அடுத்து அடுத்த சில மாதங்களுக்கு துன் மகாதீர் பிரதமராக நீடிப்பது, அவருக்கு துணைப் பிரதமராக அன்வார் இப்ராகிம் நியமிக்கப்படுவது என்பதாகும்.
இரண்டாவது முடிவு அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதாகும். மகாதீர் தரப்பினரின் ஆதரவைப் பெற அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் துணைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம்.
நம்பிக்கை கூட்டணியின் 90-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராகிம் நிறுத்தப்படுவதையே விரும்புகின்றனர். முடிவு, எதுவாக இருப்பின் இன்று தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.