கோலாலம்பூர்: சினி இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் வேட்பாளர்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தங்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம், அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மூலமாக வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரங்களை, உட்புறங்களில் வசிக்கும் மக்களுக்காக தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக நடத்த உதவுகிறது என்று சிறப்பு நாடாளுமன்றம், தேர்தல் குழு தலைவர் சைட் இப்ராஹிம் சையத் நோ ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு, சினி இடைத்தேர்தலை முன்னிட்டு கூடுதல் இணைய சேவையை அப்பகுதிக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளதை குறிப்பிட்ட அவர், “அதனை இப்போது மேலும் தொலைக்காட்சிகளுக்கும், வானொலிகளுக்கும் விரிவாக்கம் செய்வது சிறப்பாக இருக்கும்.” என்று கூறினார்.
இந்த நடைமுறை எல்லா தரப்புக்கும் எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் வேட்பாளரை எளிதாக தேர்ந்தெப்பதற்கும் இது உதவும் என்று அவர் தெரிவித்தார். தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் நேரடி விவாதத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்கள் இருந்தால் மக்கள் சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு சுலபமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.