Home One Line P1 “மகாதீரை பிரதமராக ஏற்க முடியாது” பிகேஆர் திட்டவட்ட அறிவிப்பு

“மகாதீரை பிரதமராக ஏற்க முடியாது” பிகேஆர் திட்டவட்ட அறிவிப்பு

941
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை ஏற்க முடியாது என பிகேஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் இன்று திட்டவட்டமாக முடிவெடுத்தது.

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராகிம்தான் என்ற நிலைப்பாட்டில் பிகேஆர் தொடர்ந்து உறுதியாக இருந்து வரும்.

நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்பியக் கட்சிகளான அமானா மற்றும் ஜசெக இரண்டும் அன்வாரை பிரதமர் வேட்பாளராகத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன என்றும் பிகேஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் நாட்டைக் காப்பாற்றும் நோக்கிலும் மக்கள் வழங்கிய அதிகாரத்திற்கு ஏற்ப ஆட்சியை திரும்பவும் நிலைநிறுத்தும் நோக்கிலும் துன் மகாதீர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் பிகேஆர் அறிவித்திருக்கிறது.

மூன்றாவது முறையாகத் தானே பிரதமராக வேண்டும் என மகாதீர் முன்வைத்த கோரிக்கையினால்தான் குழப்பம் எழுந்தது என்றும் பிகேஆர் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

ஜசெகவின் நிலைப்பாடு

துன் மகாதீர் பிரதமர் – அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் என்ற நிலைப்பாட்டை ஜசெக எடுத்திருப்பதாக ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் (படம்) சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த பரிந்துரைக்கு பிகேஆர் தனது நிலைப்பாட்டை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்

கடந்த சில வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் குறித்தும் சில விவரங்களை அந்தோணி லோக் மலேசியாகினி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

நம்பிக்கைக் கூட்டணியின் முதல் பரிந்துரை அன்வார் பிரதமர் – முக்ரிஸ் மகாதீர் துணைப் பிரதமர் என்பதாகும். ஆனால் இந்தப் பரிந்துரையை வாரிசான் சபா போன்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்ததாக மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் பிளஸ் என தற்போது அழைக்கப்படும் கட்சிகளின் கூட்டணி சந்திப்பில் மேற்கூறப்பட்ட இரண்டு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

துன் மகாதீர் தான் பிரதமராக அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்க வாய்ப்பு வழங்குமாறு இந்தக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்.

ஜூன் 13-ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் ஜசெக, அமானா இரண்டு கட்சிகளும் “மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” என்ற பரிந்துரையை ஆதரித்தன.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள கால அவகாசம் கோரிய பிகேஆர் செவ்வாய்க்கிழமை ஜூன் 16-ஆம் தேதிக்குள் தனது முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் அந்தத் தேதியில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில் தனது அறிக்கை ஒன்றில் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு அன்வார் இப்ராகிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மூங்கில் குருத்துகளை சூசகமாக வெட்டித் தள்ளிய அன்வார்

நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற பரபரப்பும், கேள்விகளும் நாட்டையே உலுக்கி வந்த நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது வீட்டிலுள்ள தோட்டத்துப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 18) அன்வார் இப்ராகிம் பதிவேற்றம் செய்தார்.

அவர் தனது தோட்டத்தில் உள்ள மூங்கில் குருத்துகளை சரிசெய்து சீர் செய்யும் காட்சிகளும், மூங்கில் புதர்களை களையெடுக்கும் காட்சிகளும் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருப்பது ஏதோ சில மறைமுக செய்திகளைத் தெரிவிப்பதாக கருதப்பட்டது.

“எப்போதும் போல இன்று மாலை தோட்ட வேலையில் ஈடுபட்டேன். தேவையான வகையில் நாம் சிலவற்றை அகற்றவும் அழகுபடுத்தவும் வேண்டும். அப்போதுதான் சுற்றுச் சூழல் சீராகவும் தூய்மையாகவும் இருக்கும்” என்ற பொருள்படும்படி அவர் மலாய் மொழியில் தனது டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

அதற்கேற்ப இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற பிகேஆர் கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் அன்வார்தான் என்ற இறுதியான, உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.