Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் பரபரப்புக்கிடையில் மூங்கில் குருத்துகளை திருத்திய அன்வார்!

நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் பரபரப்புக்கிடையில் மூங்கில் குருத்துகளை திருத்திய அன்வார்!

1051
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற பரபரப்பும், கேள்விகளும் நாட்டையே உலுக்கி வரும் நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது வீட்டிலுள்ள தோட்டத்துப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் அன்வார் இப்ராகிம்.

பிகேஆர் கட்சித் தலைவரான அன்வாரையே அடுத்த பிரதமராக நம்பிக்கைக் கூட்டணி முன்மொழிந்துள்ளது. இந்நிலையில் துன் மகாதீரோ தானே அடுத்த 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிரதமராகத் தொடர வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார்.

நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இன்று அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்திருக்கிறார்.

மூங்கில் குருத்துகளை திருத்திய அன்வார்

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது இல்லத்தில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் அன்வார்.

அவர் தனது தோட்டத்தில் உள்ள மூங்கில் குருத்துகளை சரிசெய்து சீர் செய்யும் காட்சிகளும், மூங்கில் புதர்களை களையெடுக்கும் காட்சிகளும் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருப்பது ஏதோ சில மறைமுக செய்திகளைத் தெரிவிப்பதாக உள்ளது.

“எப்போதும் போல இன்று மாலை தோட்ட வேலையில் ஈடுபட்டேன். தேவையான வகையில் நாம் சிலவற்றை அகற்றவும் அழகுபடுத்தவும் வேண்டும். அப்போதுதான் சுற்றுச் சூழல் சீராகவும் தூய்மையாகவும் இருக்கும்” என்ற பொருள்படும்படி அவர் மலாய் மொழியில் தனது டுவிட்டரிலும் பதிவிட்டிருக்கிறார்.

இதன் மூலம், நாளை நடைபெறும் பிகேஆர் உச்சமன்றத்தின் வழி தீர்க்கமான முடிவொன்றைச் செயல்படுத்த அவர் முனைந்திருக்கிறார் எனத் தெரிகிறது. மகாதீரின் பின்னால் இனியும் நிற்பதை விடுத்து, தானே பிரதமர் என்ற நிலைப்பாட்டில் அன்வார் உறுதியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த முடிவுக்கு நம்பிக்கைக் கூட்டணியின் மற்ற தலைவர்கள் கட்டுப்படாவிட்டால், நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவைக் கூட அவர் எடுக்கலாம் எனக் கருதப்படுகிறது.

விரைவில் நடைபெறவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில் தானே முன்னின்று புதிய கூட்டணி ஒன்றை அவர் நடத்தும் முடிவையும் எடுக்கலாம்.

துன் மகாதீருக்கு இறுதி வரை துணை நின்ற தங்களுடன் கலந்தாலோசிக்காமல் அவர் திடீரென பதவி விலகியதால்தான் கடுமையான போராட்டத்துக்கிடையில் ஆட்சியைக் கைப்பிடித்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது என அன்வார் ஆதரவாளர்கள் பலர் கருதுகின்றனர்.

எனவே, மீண்டும் அவருக்கு ஆறுமாதகால பிரதமர் வாய்ப்பு மீண்டும் வழங்குவது என்பது பொருத்தமில்லாத ஒன்று – மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது – கேலிக் கூத்தாக அமையும் என அன்வார் தரப்பினர் கருதுகின்றனர்.

வாழ்வோ, தாழ்வோ தனித்து நின்று – அல்லது தங்களுடன் இணையும் கூட்டணியினருடன் இணைந்து பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவை பெறப் போராடுவோம் என்பதே பிகேஆர் கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்களின் பார்வையாக இருக்கிறது.

இதற்கிடையில் ஜசெக சார்பில் பேசியிருக்கும் அந்தோணி லோக் இன்று மீண்டும் மகாதீர் அடுத்த ஆறுமாத காலத்திற்கான பிரதமர் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியிருக்கிறார்.

அவர் 6 மாதத்திற்குள்ளாக பதவி விலகாவிட்டால், 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிகேஆர் கட்சி மகாதீர் அந்த முடிவில் இருந்து பின்வாங்காமல் இருக்க அழுத்தம் கொடுக்க முடியும். அதற்குரிய நடைமுறைகள் இருக்கின்றன என்றும் அந்தோணி லோக் கூறுகிறார்.

உதாரணமாக, மகாதீருக்கான ஆதரவை பிகேஆர் விலக்கிக் கொண்டால் அதன்பின்னர் மகாதீர் தொடர்ந்து பிரதமராக நீடிக்க முடியாது என்றும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அன்வார் என்ன முடிவெடுப்பார்?

அவர் எடுக்கப் போகும் முடிவின் சூசகமான பிரதிபலிப்புதான் மூங்கில் புதர்களை அவர் களையெடுப்பதும் சீர்திருத்துவதுமான புகைப்படங்களா?

நாளை வரை பொறுத்திருப்போம்!

-இரா.முத்தரசன்