கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் யார் என்ற இறுதி முடிவை நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் பிகேஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் எடுக்கும்.
பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் (படம்) இன்று வியாழக்கிழமை (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
நேற்று புதன்கிழமை (ஜூன் 17) ஜசெகவின் அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் விடுத்திருந்த அறிக்கையைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளையும் தனது அறிக்கையில் சைபுடின் நசுத்தியோன் பட்டியலிட்டார்.
கடந்த 20 ஆண்டுகளாக பிகேஆர் நடத்தி வரும் அரசியல் பயணத்தில் ஜசெக, அமானா போன்ற கட்சிகள் தந்து வந்திருக்கும் ஆதரவுக்கும் சைபுடின் நசுத்தியோன் அந்த அறிக்கையில் நன்றி தெரிவித்தார்.
நடந்தது என்ன?
“கடந்த மே 30-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் அன்வார் இப்ராகிமை நாட்டின் 9-வது பிரதமராக முன்மொழியும் முடிவெடுக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி துன் மகாதீரை அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு, ஜசெகவின் சார்பில் அந்தோணி லோக் ஆகியோருடன் நானும் சந்தித்து அந்த முடிவைத் தெரிவித்தோம். மகாதீர் அந்த பரிந்துரையை நிராகரிக்கவில்லை. மாறாக, தனது கட்சியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துக் கூறுவதாகக் கூறினார். வாரிசான் சபா கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலுடனும் கலந்து பேசவிருப்பதாக மகாதீர் கூறினார். அவரிடம் வேறு மாற்று பரிந்துரைகள் பேசப்படவும் இல்லை. வழங்கப்படவும் இல்லை” என சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
ஜூன் 3-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் கூடி, அன்வார் இப்ராகிம் இந்த முடிவு குறித்து ஷாபி அப்டாலிடம் தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்தது. ஜூன் 4-ஆம் தேதி அன்வாரும் ஷாபியைச் சந்தித்தார். முடிவைத் தெரிவித்தார்.
“நானே பிரதமர்!” மகாதீர் முன்வைத்த கோரிக்கை
ஜூன் 9-ஆம் தேதி பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் பிளஸ் என்னும் கூட்டணியின் கூட்டத்தில் மகாதீரும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு தான் பிரதமராகத் தொடர வாய்ப்பு தர வேண்டும் என மகாதீர் கோரிக்கை வைத்தார். அன்வார் ஒரு பல இனக் கட்சியின் தலைவர் என்பதால் அவரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மகாதீர் தெரிவித்தார்.
“ஆனால், 6 மாதங்களுக்குப் பின்னரும் அதே பல இனக் கட்சியின் தலைவராகத்தானே இருப்பேன் என அன்வார் அதற்கு பதிலளித்தார். எங்களின் முடிவைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் கேட்டோம்” எனவும் சைபுடின் நசுத்தியோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் காலிட் சாமாட், ஷம்சுல் இஸ்கண்டார், அந்தோணி லோக் ஆகியோரைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஷாபி அப்டாலையும், மகாதீரையும் சந்தித்து விளக்கம் அளிக்கும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜூன் 13-ஆம் தேதி நடைபெற்ற பக்காத்தான் பிளஸ் கூட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் அன்வாரையே பிரதமராக முன்மொழிந்தனர்.
இந்த முறை மகாதீர் மீண்டும் தான் பிரதமராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, தனக்கு 6 மாதங்கள் போதாது, பிரதமராக நீடிக்க ஓராண்டு கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நஜிப் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த தவறுகளை மட்டுமின்றி மொகிதின் யாசின் ஏற்படுத்தியிருக்கும் தவறுகளையும் சரிசெய்ய தனக்கு இந்த கால அவகாசம் தேவை என மகாதீர் வலியுறுத்தினார்.
12 மாதங்கள் மிகவும் அதிகம் என ஷாபி அப்டால் கருத்து தெரிவித்ததோடு 6 மாதங்களே போதுமானது என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.
துன் மகாதீர் தனக்கான பிரதமர் பதவிக் காலத்தை நிர்ணயிக்காததால் அன்வாரே பிரதமர் என்ற கோரிக்கையில் நம்பிக்கைக் கூட்டணி உறுதியாக இருந்தது.
நாளை வெள்ளிக்கிழமை பிகேஆர் இறுதி முடிவெடுக்கும்
“இதைத் தொடர்ந்து ஜூன் 16-இல் பக்காத்தான் பிளஸ் தலைவர்கள் மன்றக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோது அன்று அன்வார் சரவாக் செல்லவிருப்பதால் அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு முகமட் சாபு, அந்தோணி லோக் ஆகியோரிடம் தெரிவித்தேன். எனவே, நம்பிக்கைக் கூட்டணி அன்வாருக்குப் பதிலாக மற்றொரு பிரதமர் வேட்பாளருக்கு ஒப்புக் கொண்டது என வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களில் உண்மையில்லை. நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அன்வார்தான். மகாதீர்தான் தான் பிரதமராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ஷாபி அப்டாலும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். எனவே, பக்காத்தான் பிளஸ் கூட்டணி இதுவரை இறுதி முடிவு எதனையும் பிரதமர் விவகாரத்தில் எடுக்கவில்லை. எங்களின் மாதாந்திர உச்சமன்றக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறுகிறது. எங்களின் இறுதி முடிவை அதற்குப் பின்னர் அறிவிப்போம்” என நீண்டதொரு விளக்கத்தை சைபுடின் நசுத்தியோன் தனது அறிக்கையின் வழி தெரிவித்திருக்கிறார்.