Home One Line P1 “மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” ஜசெகவின் நிலைப்பாடு! பிகேஆர் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை!

“மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” ஜசெகவின் நிலைப்பாடு! பிகேஆர் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை!

784
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான பிரதமர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கிறது. துன் மகாதீர் பிரதமர் – அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் என்ற நிலைப்பாட்டை ஜசெக எடுத்திருப்பதாக ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

இந்த பரிந்துரைக்கு பிகேஆர் தனது நிலைப்பாட்டை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தோணி லோக் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராகவும் பதவி வகித்தார்.

கடந்த சில வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் குறித்தும் சில விவரங்களை அந்தோணி லோக் மலேசியாகினி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணியின் முதல் பரிந்துரை அன்வார் பிரதமர் – முக்ரிஸ் மகாதீர் துணைப் பிரதமர் என்பதாகும். ஆனால் இந்தப் பரிந்துரையை வாரிசான் சபா போன்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அடுத்ததாக மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் பிளஸ் என தற்போது அழைக்கப்படும் கட்சிகளின் கூட்டணி சந்திப்பில் மேற்கூறப்பட்ட இரண்டு பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

துன் மகாதீர் தான் பிரதமராக அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஜூன் 13-ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் ஜசெக, அமானா இரண்டு கட்சிகளும் “மகாதீர் பிரதமர் – அன்வார் துணைப் பிரதமர்” என்ற பரிந்துரையை ஆதரித்தன.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள கால அவகாசம் கோரிய பிகேஆர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜூன் 16-ஆம் தேதிக்குள் தனது முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்தது.

ஆனால் இதுவரையில் எந்த பதிலையும் அவர்கள் வழங்கவில்லை.

“அன்வார் பிரதமர் – முக்ரிஸ் துணைப் பிரதமர் என்ற பரிந்துரை நிராகரிக்கப்பட்டுவிட்டது. தற்போது பிகேஆர் எந்த முடிவை எடுக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்” என அந்தோணி லோக் கூறியிருக்கிறார்.

இன்று முன்னதாக விடுத்த அறிக்கை ஒன்றில் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு அன்வார் இப்ராகிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

குறிப்பிடப்பட்ட தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படாததால் தாங்கள் நடந்தவற்றை பகிரங்கப்படுத்துவதாக அந்தோணி லோக் கூறினார். தனது கட்சியின் முன் அனுமதியோடுதான் இந்த விவரங்களை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்.

நேற்று நிர்ணயிக்கப்பட்டிருந்த பிரதமர் வேட்பாளருக்கான அறிவிப்பு காலங்கடந்து விட்டதால் அது குறித்து ஜசெக பகிரங்கமாகப் பேச விரும்புகிறது என்ற அந்தோணி லோக் தங்களின் ஆதரவாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் உண்மை நிலையை விளக்கவும் ஜசெக கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இப்போது பதிலளிக்க வேண்டியது அன்வார்தான், எனவே அவர்தான் நிலைமையை விளக்க வேண்டும் என்றும் அந்தோணி லோக் வலியுறுத்தியிருக்கிறார்.