Home One Line P2 முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தார்

முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தார்

1099
0
SHARE
Ad

மும்பை : இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி தற்போது ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக மதிப்பிடப்பட்டிருக்கிறார். அந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கிறார் 63 வயதான முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது அவரது சொத்து மதிப்பு 64.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.

கடன்களற்ற நிறுவனமான மாற்றிக் காட்டினார்

முகேஷின் மகன் ஆனந்த் அம்பானி – முகேஷ் மனைவி நீத்தா அம்பான – முகேஷ் அம்பானி
#TamilSchoolmychoice

அடுத்தடுத்து வரிசையாக அவர் பெற்ற அனைத்துலக முதலீடுகளின் மூலம் அவரது நிறுவனம் தற்போது கடன்களற்ற நிறுவனமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சாதனையை எதிர்வரும் 2021 மார்ச் மாதத்திற்கு முன்பாக நிறைவேற்றுவேன் என அவர் தனது பங்குதாரர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் அதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை கடன்களற்ற நிறுவனமாக மாற்றிக் காட்டி சாதனை நிகழ்த்தியிருக்கிறார் முகேஷ் அம்பானி.

இதனால் அந்த நிறுவனத்தின் பங்குவிலைகளும் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து 150 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.

உலகின் 9-வது மிகப் பெரிய பணக்காரர்

இந்த மாற்றங்களினால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்ததால் தற்பொழுது அவர் உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

தற்போது அவர் உலகப் பணக்காரர்களில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் என புளும்பெர்க் வணிக ஊடகம் வெளியிட்டிருக்கும் பட்டியல் தெரிவிக்கின்றது.

கடந்த இரண்டே மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது அவரது ரிலையன்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம்ஸ் லிமிடெட் (JIO Platforms Ltd) என்ற மின்னிலக்கத் தளத்தில் அனைத்துலக முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கைப்பேசி சந்தாதாரர்கள் சந்தையில் 48 விழுக்காட்டை அம்பானியின் நிறுவனம் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அண்மையில் காணாத மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் நிலையில் முகேஷ் அம்பானி  உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார்.

27 மாடி இல்லத்தில் வாழ்கிறார் அம்பானி

தனது செல்வச் செழிப்பு வளமைக்கு ஏற்ப ஆடம்பர வாழ்க்கையையும்  கொண்டவர் அம்பானி.

அவரது இல்லம் மும்பையில் அமைந்திருக்கும் 27 மாடி பிரம்மாண்டமானக் கட்டிடம் ஆகும். அதில் ஹெலிகாப்டர்கள இறங்குவதற்கான மூன்று தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்டிடத்தைச் சுற்றி 168 கார்கள் நிறுத்தப்படும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஐம்பது பேர் அமரக்கூடிய திரையரங்கு; ஒரு பிரம்மாண்டமான விழா மண்டபம்; மதிப்புமிக்க அழகான தொங்கு சர விளக்குகள்; மூன்று மாடிகளைக் கொண்ட தோட்டக் கலையுடன் கூடிய பூங்கா; யோகா பயிற்சி நிலையம்; சுகாதாரக் குளியல் (SPA) வளாகம்; உடற்பயிற்சிக் கூடம் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது அவரது இல்லம்.

தந்தையின் வழியில்…தனயன்

முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி

அமெரிக்காவின் வணிகத்துறை படிப்புக்குப் புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர் முகேஷ் அம்பானி. 1980-ஆம் ஆண்டில் அவரது தந்தையார் திருபாய் அம்பானி உருவாக்கிய வணிக சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க உதவி புரிய, அவர் இந்தியா திரும்பினார்.

முதலில் அவரும் அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியும் இணைந்து தங்களின் வணிகப் பயணத்தை மேற்கொண்டனர்.

2002 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி திடீரென மாரடைப்பால் காலமானார். அவர் தனது சொத்துகள் குறித்து உயில் எதனையும் விட்டுச் செல்லவில்லை.

அவரது தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் இரண்டு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அம்பானி நிறுவனங்களின் சொத்துகள் பாகப்பிரிவினை செய்யப்பட்டன.

முகேஷ் அம்பானி – இளைய சகோதரர் அனில் அம்பானியுடன்…

அதன் பின்னர் முகேஷ் அம்பானி அசுர வளர்ச்சி கண்டார். ஆனால் அவர் அளவுக்கு அனில் அம்பானி வளரவில்லை.

இன்று அவரும் அவரது நிறுவனங்களும் கடன்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவரும் தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். ஆனால் அவரது சொந்த மூத்த சகோதரரோ உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.