திருநெல்வேலி – “திருப்பதிக்கே இலட்டா?” என்ற பழமொழிக்கு அடுத்து “திருநெல்வேலிக்கே அல்வாவா?” என்பதுதான் நடைமுறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் இன்னொரு பழமொழி.
அந்த அளவுக்கு அல்வாவுக்குப் பெயர் பெற்றது திருநெல்வேலி. அதிலும் இருட்டுக் கடை அல்வா என்பது அந்நகருக்கே உரித்தான புகழ்பெற்ற கடை.
உலகம் முழுவதிலிருந்து திருநெல்வேலிக்கு வருபவர்கள், அந்நகரைக் கடந்து செல்பவர்கள், இருட்டுக் கடை அல்வாவை வாங்காமலோ, சாப்பிடாமலோ செல்ல மாட்டார்கள்.
அந்தக் கடையின் முதலாளி ஹரிசிங். அவருக்கு கொவிட்-19 தொற்று கண்டது உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) காய்ச்சல் கண்டதால் பாளையங்கோட்டையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஹரிசிங். அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் கொவிட்-19 இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை கொவிட்-19 சிகிச்சை மையம் ஒன்றுக்கு மாற்ற அந்த தனியார் மருத்துவமனை ஏற்பாடுகள் செய்தது.
இதற்கிடையில் அவர் தான் தங்கியிருந்த மருத்துவமனை அறையில் துணி ஒன்றைப் பயன்படுத்தி ஜன்னல் வழியாக தூக்கிட்டுக் கொண்டார் என ஊடகங்கள் தெரிவித்தன. ஹரிசிங் மரணம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.
திருநெல்வேலி திருநகர் பகுதியில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற நெல்லையப்பர் ஆலயம். அதன் அருகில் 1900 ஆண்டில் ஹரிசிங்கின் தாத்தா அல்வா கடையைத் தொடக்கினார்.
சிறிய அளவில் தொடங்கப்பட்ட அல்வா கடையின் வணிகம், ஆண்டுகள் கடக்க, பன்மடங்கு அதிகரித்தாலும் அந்த இடத்திலேயே தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது.
மாலையில்தான் கடை திறக்கப்பட்டு அல்வா சுடச் சுட பரிமாறப்படும். ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து அல்வாவைப் பொட்டலம் கட்டியும் வாங்கிச் செல்வார்கள். சிறிய மின்சார விளக்கு மட்டுமே உள்ள கடை என்பதால் நாளடைவில் “இருட்டுக் கடை” என்ற பெயரைப் பெற்றது இந்தக் கடை.
இத்தனை ஆண்டுகளில் திருநெல்வேலியின் அடையாளமாகவும், ஏன் தமிழகத்தின் அடையாளமாகவும், உலகப்புகழ் பெற்ற ஒரு பலகாரக் கடையின் முதலாளிக்கும் கொவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டதும் அதற்கு அஞ்சி அவர் தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சி தரும் சோகம்தான்!