Home One Line P1 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனுமதி : தள்ளுபடி செய்ய மலேசிய கினி விண்ணப்பம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அனுமதி : தள்ளுபடி செய்ய மலேசிய கினி விண்ணப்பம்

492
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் தொடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான அனுமதியைத் தள்ளுபடி செய்ய மலேசியாகினி இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.

சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) அனுமதி வழங்கியது.

கடந்த திங்கட்கிழமையன்று (ஜூன் 15) இந்த வழக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மலேசிய கினி ஊடகத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் முடிவில் பதிவிடப்பட்ட வாசகர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கு கடந்த ஜூன் 17-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருணுக்கு வழக்கைத் தொடரும் அனுமதியை வழங்கியது. நீதிபதி ரொஹானா யூசோப் இந்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு நிகழ்ந்திருப்பதை இட்ருஸ் ஹாருண் நிரூபித்திருப்பதால் அவருக்கு அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதி அப்போது தெரிவித்தார்.

எந்த அடிப்படையில் வழக்கு தொடுக்கப்படுகிறது?

“தலைமை நீதிபதி அனைத்து நீதிமன்றங்களும் ஜூலை 1 முதல் முழுமையாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்” என்ற ஒரு செய்தியை கடந்த ஜூன் 9ஆம் தேதி மலேசியாகினி வெளியிட்டது. அந்த செய்திக்கு ஐந்து வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் நீதித் துறை தவறுகள் இழைத்ததாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் தொனிக்கும் வகையில் அமைந்திருந்தன என சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருண் (படம்) சமர்ப்பித்திருக்கும் சத்தியப் பிரமாணம் தெரிவித்தது.

நீதித் துறை நேர்மையையும் நீதிமன்ற நீதி பரிபாலனத்தையும் முறையாகக் கையாள்வது இல்லை என்றும் அந்த வாசகர் கருத்துகள் தெரிவித்ததாக சட்டத் துறை தலைவர் தனது சத்தியப் பிரமாணத்தில் தெரிவித்தார்.

நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வண்ணமும் நீதிபரிபாலன நிர்வாகத்தை குறை கூறும் வண்ணமும் இந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன என்றும் சட்டத்துறை தலைவர் இந்த வழக்கில் சமர்ப்பித்த சத்திய பிரமாணத்தில் தெரிவித்திருக்கிறார்.

நீதித்துறைக்கு எதிரான இந்த கருத்துகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் தவறு இழைத்ததாகவும், நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகவும் மலேசியா கினி மீதான வழக்கு மனுவில் சட்டத் துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் ஜூன் 25-க்கு கூட்டரசு நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது

மலேசியா கினியின் விண்ணப்பம்

இன்று வியாழக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கிற்கான அனுமதியை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்திற்கு ஆதரவாக மலேசியாகினி ஆசிரியர் ஸ்டீவன் கான் (படம்) சமர்ப்பித்த சத்தியப் பிரமாணத்தில் வாசகர்களின் கருத்துகளை பதிவிட்டதாக மலேசியாகினி மீது குற்றம் சுமத்த முடியாது எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற வாசகர் கருத்துகள் அதிக அளவில் பதிவேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எல்லாவற்றையும் மலேசியாகினி நேரடியாக கண்காணித்துப் பரிசீலனை செய்வது என்பது இயலாத ஒன்று என்றார் அவர்.

மலேசியாகினியில் பதிவு செய்துள்ள வாசகர்கள் மட்டுமே கருத்துகளைப் பதிவிட முடியும். பதிவிடுவதற்கு முன்னர் மலேசியாகினியின் விதிமுறைகளுக்கும் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மற்ற எல்லா இணைய ஊடகங்களைப் போன்று வெளியிடப்படும் செய்திகள் குறித்து வாசகர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என்றும் ஸ்டீவன் கான் தனது மனுவில் குறிப்பிட்டார்.

“மலேசியாகினி உள்நோக்கத்தோடு இந்தக் கருத்துகளைப் பதிவேற்றம் செய்ததாக வாதி (சட்டத் துறைத் தலைவர்) நிரூபிக்க வேண்டும். மூன்றாம் தரப்பு வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அவை என்பதால் மலேசியாகினி அதற்குப் பொறுப்பேற்க முடியாது. எனவே சட்டத்துறைத் தலைவரின் வழக்கு மேலும் தொடரப்படுவதற்கான ஆதார அம்சங்கள் எதுவுமில்லை” எனவும் ஸ்டீவன் கான் தனது சத்தியப் பிரமாணத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கக்கூடாது என்றும் ஸ்டீவன் கான்னின் மனு மேலும் வாதிட்டது. மாறாக உயர் நீதிமன்றத்திலேயே தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொடுக்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதி நிருவாகம் குறித்த பொதுவான கருத்துகள்தானே தவிர, கூட்டரசு நீதிமன்றத்தை சுட்டிக் காட்டும் விதத்தில் அமைந்த கருத்துகள் அல்ல என்றும் ஸ்டீவன் கான்னின் சத்தியப் பிரமாணம் தெரிவித்தது.

மலேசியாகினியின் விண்ணப்பம் எதிர்வரும் ஜூலை 2-ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

காவல் துறையில் வாக்குமூலம்

இந்த விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் காவல் துறை தலைமை அலுவலகத்தின் அதிகாரிகள் மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கான்’னிடம் இருந்து அண்மையில் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர்.

இந்த வழக்கு, தொடர்பு பல்ஊடக சட்டம் 1998 மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் காவல் துறையினரால் விசாரிக்கப்படுகிறது என்றும் மலேசியாகினி தெரிவித்தது.

தனியார் இணைய ஊடகமாக கடந்த 20 ஆண்டுகாலமாக தீவிரமாக இயங்கி வரும் மலேசியாகினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றுக்கு உள்ளாகியிருப்பது இதுவே முதன் முறையாகும்.