கோலாலம்பூர்: குறுகிய காலத்தில் உயர் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் எடுத்த முடிவு மாணவர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் கடினமாக இருக்கும் என்று முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாத்திக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“இந்த முடிவு மே 27 அன்று உயர்கல்வி அமைச்சின் ஓர் அறிக்கைக்கு முரணானது, பொது பல்கலைக்கழகங்களில் கற்றல் நடைமுறைகள் டிசம்பர் 31 வரை இயங்கலையில் நடைபெறும் என்று அறிவித்தது.
“இந்த முடிவு அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்று மாணவர்களின் குடும்பங்களிடமிருந்து ஏராளமான புகார்கள் எனக்கு வந்துள்ளன.” என்று அவர் இன்று முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி நிறுவன மாணவர்கள் தங்களின் தங்குமிடங்களை காலி செய்ய வேண்டியது மட்டுமல்லாமல், வாடகை வீட்டு ஒப்பந்தங்களை நிறுத்த வேண்டிய மாணவர்களும் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சபா அல்லது சரவாக் போன்ற பயணங்களுக்கு அதிகமான விலையில் விமான நுழைவுச் சீட்டுகளை வாங்க வேண்டிய மாணவர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.
“மாணவர்கள் தங்குமிடங்களை காலி செய்ததோடு மட்டுமல்லாமல், பலர் வாடகையை நிறுத்திவிட்டனர். மேலும் சிலர் அதிக விலைக்கு விமானப் பயண நுழைவுச் சீட்டுகளை (குறிப்பாக சபா மற்றும் சரவாக் இருந்து) எடுக்க வேண்டியுள்ளது.
“இந்நேரத்தில் நிதிச் சுமை நிச்சயமாக மிகவும் கடினமாக இருக்கும்.
“பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவதற்கான அறிவிப்பும் சுமார் ஒரு மாதத்தில் மாணவர்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவோடு வெளியிடப்பட்டது. இப்போது மாணவர்கள் புதிய வாடகை வீட்டைக் கண்டறிய வேண்டும்.” என்று அவர் கூறினார்.
பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று சைட் சாதிக் ஒப்புக் கொண்டாலும், அவசர முடிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
“மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.
சம்பந்தப்பட்டவர்களின் கவலைகளை எளிதாக்க உயர்கல்வி அமைச்சு இதை விளக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
நேற்று, தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், உயர்கல்வி நிறுவனங்கள் விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் விரைவில் அதற்கான தேதியை அறிவிக்கும் என்றும் கூறியிருந்தார்.