Home One Line P1 ஜசெக: நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்

ஜசெக: நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்

690
0
SHARE
Ad

ஈப்போ: கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவால் நீக்கப்பட்ட மூன்று ஜசெக உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், மாறாக அவர்கள் பணிநீக்கம் நியாயமற்றது என்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நியாயமற்றது என்று இங்கா கோர் மிங் கூறினார்.

பேராக் ஜசெக தலைவருமான அவர், மூவரும் கட்சி விதிமுறைகளை மீறியுள்ளனர் என்பது தெளிவாகிறது என்று கூறினார்.

தேசிய கூட்டணி மாநில அரசாங்கத்தின் கீழ் பத்து காஜா மாவட்ட ஆட்சியாளராக பதவியை ஏற்றுக்கொண்ட காங் லாய் லிங் இதில் அடங்குவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“கட்சி ஒழுக்காற்றுக் குழு அவர்கள் மீதான புகார்களை விசாரித்து தெளிவான உண்மைகளின் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கண்டறிந்துள்ளது.

“கடந்த ஆண்டுகளில் அவர்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த கட்சியிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது.” என்று அவர் கூறினார்.

“நான் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் சூ கியோங்கின் அரசியல் செயலாளராக காங் உள்ளார். மார்ச் மாதத்தில் நம்பிக்கைக் கூட்டணி மாநில அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து தம்மை சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக பவுல் அறிவித்தார்.

இதனிடையே, கட்சியை விட்டு வெளியேறி தேசிய கூட்டணியை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவிய கட்சி உறுப்பினர்களை ஜசெக நேற்று நீக்கியது.

ஜசெக ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் சோங் சியெங் ஜென் கூறுகையில், காங் லாய் லிங், எங் சூக் வை மற்றும் கி போ சோங் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க குழு முடிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தார்.

துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் சூ கியோங்கிற்கு ஆதரவாக அவர்கள் மூவரும் எதிர் பிரேரணை தாக்கல் செய்த பின்னர், அவர்கள் மீது ஒழுக்காற்றுக் குழுவுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சோங் கூறினார்.

“அவர்கள் அனைவரும் நீக்கப்பட்ட பவுல் யோங் சூ கியோங்கிற்கு தீவிரமாக உதவுவதாகக் கண்டறியப்பட்டது. கட்சித் தாவிய அல்லது நீக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தும் அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

“தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பத்து காஜா மாவட்ட ஆட்சி உறுப்பினராக காங் லாய் லிங் நியமிக்கப்பட்டுள்ளார்.”

“தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் பதவியேற்ற எந்தவொரு உறுப்பினர்களையும், இந்த குழு பொறுத்துக்கொள்ளாது. ” என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.