கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் குடும்பத்தினர் காவல் துறை மீது நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.
அடிப் மரண விசாரணையில் காவல் துறையின் தோல்வி, அலட்சியத்தைத் தொடர்ந்து சேதங்களைக் கோர நடவடிக்கை எடுக்க இருப்பதாக அடிப் தந்தை முகமட் காசிம் ஹாமிட் தெரிவித்தார்.
தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
“நான் என் மகனை இழந்தேன். ஆனால், அவரது மரணத்திற்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனவே, நான் இழப்பீடு கோர விரும்புகிறேன். டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் வெளியிட்ட அறிக்கையில, எனது குடும்பமும், நானும் மிகவும் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளோம்.
“இது விசித்திரமானது என்று நான் கருதுகிறேன். குற்றச் செயலின் விளைவாக இறந்துவிட்டார் என்று மரண விசாரணையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தேசிய காவல் துறைத் தலைவர் எவ்வாறு ஒரு முரண்பாடான அறிக்கையை வெளியிட்டார்” என்று அவர் இன்று அலோர் ஸ்டாரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், முகமட் அடிப் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தின் விசாரணையை மதிக்காமல், முரணாக அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல் துறை அண்மையில் மறுத்தது.
உண்மைகள் எதுவும் மறைத்து பெய்யான கூற்றுகளை தாம் வெளியிடவில்லை என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.
“வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் விசாரணைகள், சமீபத்திய கண்டுபிடிப்புகளிலிருந்து வந்தவை. அவை விசாரணையின் முடிவுகளுக்கு முரணாக இல்லை.
“இன்றைய நிலவரப்படி, முகமட் அடிப் வழக்கு மூடப்படவில்லை. இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302- இன் கீழ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.
இன்றுவரை, முகமட் அடிப் தாக்கப்பட்டதைக் கண்டதாக சாட்சிகள் இல்லை. பெறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் செவிப்புலன் அல்லது தனிப்பட்ட கருத்துகள் என்று அவர் வலியுறுத்தினார்.
“குற்றவாளிகளை அடையாளம் காண இன்னும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணையின் முடிவைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும்.
“சாட்சி கருத்துகள் மற்றும் நிபுணர்களின் அடிப்படையில் ஒரு தாக்குதல் நடந்திருந்தால், தாக்குதலின் அடையாளங்கள் இருக்கும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய விசாரணைக் குழு இந்த விஷயத்தை ஆய்வு செய்து வருகிறது,” என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக, முரண்பாடாக இருப்பதாகக் கண்டறியப்பட்ட மேலதிக சாட்சிகளையும் விசாரணைக் குழு விசாரித்து வருவதாக அவர் கூறினார்.
“இதேபோல் விசாரணையின் போது தங்கள் அறிக்கைகளை வழங்கும்போது புதிய தகவல்கள் அல்லது விளக்கங்களை வெளிப்படுத்திய சாட்சிகள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும்.
“விசாரணையில் புதிய ஆதாரங்கள் அல்லது விளக்கங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறியிருந்தார்.
அண்மையில், முகமட் அடிப் கொலை வழக்கின், முக்கியமான சாட்சி ஒருவர் அவரது சாட்சியத்தை மாற்றியதாக காவல் துறை தெரிவித்திருந்தது.
சமீபத்தில் சாட்சியை மீண்டும் விசாரித்தபோது தகவல்கள் மாற்றப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமட் தெரிவித்திருந்தார்.
2018-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அன்று சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஒரு கலவரத்தைக் கண்டதாக ஷா அலாம் நீதிமன்றத்தில் முன்னர் கூறிய என்.சுரேஷ் தற்போது சாட்சியத்தை மாற்றி உள்ளதாக ஹுசிர் குறிப்பிட்டிருந்தார்.