கோலாலம்பூர்: அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்களும், திரைப்படங்களை சமூக ஊடக தளங்களில் அல்லது தொலைக்காட்சி நிலையங்களில் வெளியிடுவதற்கு முன்பு திரைப்பட தயாரிப்பு உரிமம் மற்றும் திரைப்பட சான்றிதழ் (SPP) க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிரதான ஊடக நிறுவனங்களிலிருந்து அல்லது தனிப்பட்ட ஊடகங்களிலிருந்து வந்தாலும் அதனைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியம் (பினாஸ்) சட்டம் 1981 – ஐக் கொண்டு, எந்தவொரு நபரும் திரைப்படங்களைத் தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உரிமம் வழங்கப்படாவிட்டால், பிரிவு 21- இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு செயல்பாட்டிலும் பங்கேற்கக்கூடாது. ” என்று அவர் கூறினார்.
திரைப்படத் துறைக்கு, திரைப்படம் அல்லது காணொளி தயாரிப்பு உரிமம், திரைப்படம் அல்லது காணொளி விநியோக உரிமம் மற்றும் திரைப்படம் அல்லது கண்காட்சி உரிமம் என மூன்று வகையான உரிமங்களை பினாஸ் வழங்குவதாக சைபுடின் கூறினார்.
டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பயன்பாடுகளில் உள்ள காணொளிகளும் இதில் இடம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த சைபுடின், இந்தச் சட்டத்தின் படி, திரைப்படங்கள், குறும்படங்கள், முன்னோட்டக் காணொளிகள், ஆவணப்படங்கள், விளம்பரங்களும் அடங்கும் என்று கூறினார்.