Home உலகம் சோமாலியாவில் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு நியாயமான விசாரணை

சோமாலியாவில் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு நியாயமான விசாரணை

1120
0
SHARE
Ad

மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் 2019-இல்  கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிரான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருவதாக அங்குள்ள மலேசியத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அகமட் முஸ்தாகிம் அப்துல் ஹாமிட் என்ற பெயர் கொண்ட அந்த மலேசியர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சோமாலியாவின் இராணுவ நீதிமன்றத்தால் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். நீதிமன்ற விசாரணைகள் 2019-ஆம் ஆண்டு தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

சோமாலியாவில் பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்படும் முதல் மலேசியர் அகமட் முஸ்தாகிம் ஆவார். சுமார் 2 ஆண்டுகள் அவர் தடுப்புக் காவலில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

சோமாலியாவில் நண்பர் ஒருவரைப் பார்க்க வந்ததாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கத்துடன் தனக்கு தொடர்புகள் ஏதும் இல்லை என்றும் விசாரணையில் அகமட் முஸ்தாகிம் கூறியிருக்கிறார்.

வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா (படம்) தமது அமைச்சு இந்த விவகாரம் தொடர்பில் அணுக்கமாக கண்காணித்து வருவதாக கடந்த சனிக்கிழமை (18 செப்டம்பர்) தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்ட அந்த நபரின் உடல் நலம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சு அக்கறை செலுத்தி வருவதாகவும் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

சூடானில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்ட மலேசியரை நேரில் சென்று சந்தித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை மலேசியா அணுக்கமாக கண்காணித்து வரும் என்றாலும் சோமாலியாவின் உள்நாட்டு சட்டங்களையும் தாம் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும் சைபுடின் குறிப்பிட்டிருந்தார்.

34 வயதான அகமட் முஸ்தாகிம் 2009 அல்லது 2010-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சோமாலியாவுக்குள் நுழைந்தார் என்று நம்பப்படுகிறது.

அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவினார் என்ற கோணத்தில் சோமாலியா அரசாங்கம் அகமட் முஸ்தாகிமை விசாரித்து வருகின்றது.

அல்-ஷபாப் என்பது அல் கய்டா இயக்கத்தின் மிக அபாயகரமான பிரிவாகக் கருதப்படுகிறது. கடந்த காலங்களில் பல்வேறு தாக்குதல்களை இந்த இயக்கம் மேற்கொண்டிருந்தது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal