Home One Line P1 சிலிம் இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி போட்டியிடாது

சிலிம் இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி போட்டியிடாது

534
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம்  சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் என்ற நம்பிக்கைக் கூட்டணி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தாங்கள் போட்டியிடாமல் துன் மகாதீர் தரப்புக்கு வழி விடுவதாக நம்பிக்கை கூட்டணியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் சிலிம் சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் துன் மகாதீர் தலைமையிலான பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டார். எனினும் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

#TamilSchoolmychoice

அந்த அடிப்படையில் துன் மகாதீர் தரப்புக்கு விட்டுக் கொடுப்பதாக சைபுடின் நசுத்தியோன் அறிவித்திருக்கிறார்.

துன் மகாதீர் தரப்பினர் சிலிம் தொகுதியில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த சின்னத்தில் அந்தத் தரப்பு வேட்பாளர் போட்டியிடுவார் என்பது இன்னும் தெரியவில்லை.

தற்போது மொகிதின் யாசின் தரப்புக்கு எதிராக “பெர்சாத்து இருட்டடிப்பு” (‘Bersatu Blackout’) என்ற பிரச்சாரத்தோடு மகாதீர் அணியினர் தற்போது செயல்பட்டு வருகின்றனர்.

அம்னோ போட்டியிடுகிறது

இதற்கிடையில் சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்த பேராக் தேசிய கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளது.

இதனை பேராக் பெர்சாத்து கட்சித் தலைவரும் மாநில மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.

“தேசிய கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே களமிறக்க ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே எந்த மோதலும் இல்லை. வேட்பாளருக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம்” என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

கடந்த ஜூலை 15-ஆம் தேதி, டத்தோ முகமட் குசாய்ரி அப்துல் தாலிப், 59, காலமானதைத் தொடர்ந்து, சிலிம் இடைத்தேர்தல் ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடைபெற உள்ளது.