Home One Line P1 சிலிம் இடைத் தேர்தல் : முடிவுகள் காட்டுவது என்ன?

சிலிம் இடைத் தேர்தல் : முடிவுகள் காட்டுவது என்ன?

1112
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம்: நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்று முடிந்த பேராக் மாநிலத்தின் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில்  எதிர்பார்த்தபடியே தேசிய முன்னணி மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட அம்னோ தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் முகமட் சைடி அசிஸ் 13,060 வாக்குகள் பெற்றார். பெஜூவாங் கட்சியின் சார்பாக சுயேச்சையாகப் போட்டியிட்ட அமிர் குசாய்ரி 2,115 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

மற்றொரு சுயேச்சை வேட்பாளரான சந்திரசேகரன் சுப்பிரமணியம் 276 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

43 வயதான சைடி அசிஸ் 10,945 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகள் 15,451. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 68.40 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே நேற்று செலுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே தேர்தல் ஆணையம் 85 விழுக்காட்டு வாக்களிப்பைத் தாங்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் அது நிகழவில்லை.

வாக்களிப்பில் ஆர்வம் குறைந்தது ஏன்?

மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை குறைந்ததற்கு வாக்காளர்களிடையே ஆர்வமின்மையே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணியே வெற்றி பெறும் என்ற நிலைமை வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலிருந்தே நிலவியது. வாக்காளர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்கவில்லை.

அப்படியே யார் வென்றாலும் பேராக் மாநில அரசாங்கமும் மாறப் போவதில்லை, மத்திய அரசாங்கத்திலும் மாற்றம் ஏதும் நிகழப் போவதில்லை என்ற எண்ண ஓட்டமும் வாக்காளர்களிடையே ஆர்வம் குறைந்ததற்கானக் காரணங்களில் ஒன்று.

முவாபாக்காட் கூட்டணியின் வலிமையை எடுத்துக் காட்டிய இன்னொரு தேர்தல்

அம்னோ-பாஸ் இணைந்த முவாபாக்காட் நேஷனல் கூட்டணி மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் தொடர்ந்து வலுவான அரசியல் சக்தியாகத் திகழ்கின்றது என்பதை சிலிம் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெர்சாத்து வலிய வந்து முவாபாக்காட் கூட்டணியில் ஒட்டிக் கொண்டாலும், இந்த வெற்றியில் அதன் பங்கு என்பது மிகவும் குறைவானதே ஆகும். பெர்சாத்து தனித்த கட்சியாக முவாபாக்காட் கூட்டணிக்கு கூடுதலான ஆற்றலை வழங்க வாய்ப்பில்லை.

அம்னோ-பாஸ் இணைந்த கூட்டணி திரட்டக் கூடிய வாக்குகளே ஒரு தொகுதியை  வெற்றிகொள்ள அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். இந்நிலையில் பெர்சாத்து கூடுதலாக அவர்களுக்கு வாக்குகளை திரட்டித் தரும் வாய்ப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன.

மகாதீர் கட்சியையும் ஒதுக்கித் தள்ள முடியாது

முதன் முறையாகக் களத்தில் இறங்கிய துன் மகாதீரின் பெஜூவாங் கட்சியின் ஆற்றலையும் நாம் ஒரேயடியாக புறக்கணித்து விட முடியாது.

இந்த இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் அணியினரோ, பிகேஆர் கட்சியினரோ தீவிரமாக இறங்கி தேர்தல் பணியாற்றவில்லை.  இதுவும் பதிவு வாக்குகள் எண்ணிக்கை குறைந்ததற்கும், பெஜூவாங் வேட்பாளரின் வாக்குகள் குறைந்ததற்குமான காரணங்களில் ஒன்றாகும்.

பிகேஆர் முழுமையாகத் தேர்தல் பணியில் இறங்கியிருந்தால் நிச்சயம் பெஜூவாங் கட்சி வேட்பாளருக்கான வாக்குகள் அதிகரித்திருக்கும்.

பதிவு பெறாத கட்சி – சொந்த சின்னமில்லை – எனவே சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய கட்டாயம் – அவ்வளவாக அறிமுகமில்லாத புதிய வேட்பாளர் – எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த ஆதரவு தேர்தல் களத்தில் இல்லை – இப்படிப் பல பின்னடைவுகளோடு தேர்தலைச் சந்தித்தார் பெஜூவாங் வேட்பாளர் அமீர் குசைரி முகமட் தனுசி.

இருப்பினும் சுயேச்சை வேட்பாளராக 2,115 வாக்குகளை அவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்த வாக்குகளை துன் மகாதீரின் ஆதரவு வாக்குகளாகவும் பார்க்கலாம். அல்லது எதிர்க்கட்சிகள் இந்தத் தொகுதியில் எப்போதும் அறுவடை செய்யக் கூடிய ஆதரவு வாக்குகளாகவும் பார்க்கலாம்.

எனவே, 15-வது பொதுத் தேர்தலில் மூன்றாவது சக்தியாக பெஜூவாங் தனித்துப் போட்டியிட்டால் பல தொகுதிகளில் மலாய் வாக்குகளை பிளவுபடுத்தக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் சிலிம் இடைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மகாதீர் ஏற்கனவே கூறியபடி ஒரு தொகுதியில் வெற்றி பெறப் போவது நம்பிக்கைக் கூட்டணியா அல்லது தேசியக் கூட்டணியா என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக பெஜூவாங் திகழும்.

தனித்து சில நாடாளுமன்றத் தொகுதிகளை பெஜூவாங் வெல்ல முடியுமென்றால் அதன் காரணமாக அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டால், அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக பெஜூவாங் திகழும்.

எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வலிமை மிக்க முவாபாக்காட் கூட்டணியை முறியடிக்க முடியும் என்பதை சிலிம் இடைத் தேர்தல் முடிவு தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

எனவே, இந்த முடிவின் அடிப்படையில் எதிர்கட்சிகளிடையே மனமாற்றமும், புரிந்துணர்வும், மீண்டும் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்