பெய்ரூட்: பெய்ரூட்டில் இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலையை லெபனான் அமைச்சரவை புதன்கிழமை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 135- ஆக உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பெய்ரூட் துறைமுகத்தில் இரண்டு பெரிய வெடிப்புகள் உலுக்கியது. லெபனானின் தலைநகரம் முழுவதும் கட்டிடங்களை அசைத்து நகரத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதுவரை ஏற்பட்ட வெடிப்பில் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசான் அறிவித்தார்.
நகரத்தில் பாதுகாப்பைப் பராமரிக்கும் லெபனான் இராணுவத்தின் மேற்பார்வையில் அவசரகால நிலை நீடிக்கும்.
பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கு எண் 12- இல் 2014 முதல் சேமிக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று முதன்மை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெய்ரூட் துறைமுகத்தில் 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட்டை சேமித்து வைப்பதில் பொறுப்பில் இருந்த துறைமுக அதிகாரிகளை கைது செய்ய அமைச்சரவை முடிவு செய்தது.
விபத்தினால் ஏற்பட்ட அழிவைக் கருத்தில் கொண்டு, லெபனானின் திரிப்போலி துறைமுகத்தின் மூலம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைப் பெறுமாறு பொதுப்பணி அமைச்சகத்தை அமைச்சரவை வலியுறுத்தியது.
வீடுகளை இழந்த மக்களுக்கு பள்ளிகள் மற்றும் தங்கும் விடுதிகளைத் திறக்கும் பணியில் நிவாரண ஆணையம் செயல்படும்.
பேரழிவு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் ஐந்து நாட்களுக்குள் விசாரணைகளின் முடிவுகளை வெளிப்படுத்த உயர் பாதுகாப்பு மன்றம் உறுதியளித்துள்ளது.
இதற்கிடையில், டான்ஸ்ரீ மொகிதின் யாசின், லெபனானில் ஏற்பட்ட இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லெபனானுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க மலேசியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கமும் மலேசியா மக்களும் அனுதாபம் தெரிவிப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.
“இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாட்டை உலுக்கிய பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து மலேசியா லெபனான் மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வெடிப்புக்குப் பின்னர் பெய்ரூட்டில் உள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதற்கு மொகிதின் மனநிறைவு அடைவதாகத் தெரிவித்தார்.