Home One Line P2 வால்ட் டிஸ்னி கொவிட்-19 பாதிப்பால்  பெரும் இழப்பை எதிர்நோக்கியது

வால்ட் டிஸ்னி கொவிட்-19 பாதிப்பால்  பெரும் இழப்பை எதிர்நோக்கியது

738
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் : வால்ட் டிஸ்னி நிறுவனம்  தனது நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கடுமையான இழப்பை எதிர்நோக்கியது.

கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக காரணம் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 27ஆம் தேதி முடிவடைந்த மூன்று மாத காலத்தில் அதன் ஒட்டு மொத்த வருமானம் 42 விழுக்காடு வீழ்ச்சியடைந்து 11.78 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

#TamilSchoolmychoice

தனது வணிக செயல் நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஏறத்தாழ 3.5 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 85 விழுக்காடு சரிவாகும்.

உலகம் எங்கிலும் உள்ள வால்ட் டிஸ்னியின் உல்லாச மையங்கள் மூடப்பட்டதால் இந்த வருமான இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட்-19  பாதிப்புகளால்  பூங்காக்கள்,  மனமகிழ் மையங்கள் மற்றும் அதன் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் டிஸ்னிக்குக் கிடைத்து வந்த வருமானம் குறைந்தது.

மார்ச் மாதம் முதற்கொண்டே அமெரிக்கா உள்ளிட்ட உலகின் மற்ற நாடுகளில் உள்ள டிஸ்னி உல்லாச மையங்கள் கொவிட்-19 அச்சத்தால் மூடப்பட்டன.

உல்லாசக் கப்பல் பயணங்களும் நிறுத்தப்பட்டன.

சீனாவின் ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா கடந்த மே 11ஆம் தேதி முதல்முறையாக திறக்கப்பட்டது.

ஹாங்காங் டிஸ்னிலேண்ட் பூங்கா ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் ஜூலை மாதத்தில் மூடப்பட்டது.

திரைப்படங்கள்  மூலம்  டிஸ்னி பெற்று வந்த வருமானத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டது.

அதன் திரைப்பட உள் அரங்குகளின் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானத்தில் கடந்த மூன்று மாத காலத்தில் 55 விழுக்காடு சரிவு ஏற்பட்டதால் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்களே இந்த துறையின் மூலம்  டிஸ்னிக்குக் கிடைத்தது.

திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்படத் தொழிலின் மூலமான வருமானத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டது. உலகம் முழுவதும் டிஸ்னி தயாரிக்கும் படங்கள் உள்ளிட்ட ஆங்கிலப் படங்களுக்கு என பெரும் சந்தை இருந்தாலும் கொவிட்-19  பிரச்சினைகளால் திரையரங்குகள் பல நாடுகளில் மூடப்பட்டிருக்கின்றன. சில நாடுகளில் மீண்டும் திரையரங்குகள் இயங்கினாலும் இன்னும் முழுமையான இரசிகர் கூட்டத்துடன் இயங்கவில்லை.

இதுவும் டிஸ்னியின் வருமானம் குறைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.