பெங்களூரு: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர் பதிவிட்ட முக நூல் பதிவால் அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதில் இருவர் பலியானதோடு, பலர் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெங்களூரின் கிழக்கு பகுதியில் வன்முறை வெடித்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, போராட்டக்காரர்கள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் முர்த்தியின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டதோடு, பல வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகைகுண்டுகளை பயன்படுத்தியும் கலைத்துள்ளனர்.
டிஜி ஹாலி, கேஜி ஹாலி ஆகிய பகுதியில் வன்முறை நிகழ்ந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டி சட்டமன்ற உறுப்பினர் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.