கோலாலம்பூர் – “தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என புங்க் மொக்தார் வெளியிட்டிருக்கும் கருத்துக்கு சீனக் கல்வி இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன.
புங்க் மொக்தார் சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராவார். சபா அம்னோவின் தலைவராகவும் செயல்படுகிறார்.
புங்க் மொக்தார் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வெளியிட்டிருக்கும் கருத்துகளுக்கு டோங் சோங், ஜியாவ் சோங் என்ற இரண்டு சீனக் கல்வி இயக்கங்களும் கூட்டாக இணைந்து பதிலடி கொடுத்திருக்கின்றன.
டோங் சோங் (Dong Zong) என்பது சீனப் பள்ளிகளின் நிர்வாகக் குழுக்களின் கூட்டமைப்பாகும். ஜியாவ் சோங் (Jiao Zong) என்பது சீனப்பள்ளிகளின் ஆசிரியர்களை ஒருங்கிணைத்துப் பிரதிநிதிக்கும் சங்கமாகும்.
இந்த இரண்டு இயக்கங்களும் இணைந்து “டோங் ஜியாவ் சோங்” (Dong Jiao Zong) என அழைக்கப்படுகிறது.
இந்த இரண்டு இயக்கங்களும் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில் புங்க் மொக்தாரின் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைதான் இன உணர்வுகளைத் தூண்டுவதாக அமைந்திருப்பதாகவும், சமுதாயத்தை பிளவுபடுத்துவதாகவும் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“புங் மொக்தாரின் பொறுப்பற்ற அறிக்கைகள் தொடர்ந்து இன உணர்வுகளைத் தூண்டுகின்றன. சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதிலும், ஒற்றுமை வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைகள் போடுவதிலும் இத்தகைய அறிக்கைகள் முக்கியப் பங்காற்றுகின்றன” என்றும் அந்தக் கூட்டறிக்கை மேலும் தெரிவித்தது.
“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்றுவதோடு அரசாங்க நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களின் பேச்சுகளில் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதோடு தங்களின் அடிப்படை கடமைகளை மறந்து செயல்படக் கூடாது” எனவும் டோங் ஜியாவ் சோங் விடுத்த கூட்டறிக்கை குறிப்பிட்டது.
நாட்டின் அரசியலமைப்பு சட்டம் எல்லா இனங்களுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்றுக் கொள்வதற்கும், இனம், மதம், கலாச்சாரம், கல்வி என தங்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கும் சட்டரீதியான வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்றும் அந்தக் கூட்டறிக்கை சுட்டிக் காட்டியது.
“தாய்மொழிப் பள்ளிகளில் சீனம், தமிழ் மொழி ரீதியாக பாடங்கள் நடத்தப்பட்டாலும் அவை அனைத்தும் கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான பாடத்திட்டங்களை கொண்டிருக்கின்றன. அதன்படி மலாய், ஆங்கிலம் ஆகிய இரண்டும் சீன, தமிழ்ப் பள்ளிகளில் கட்டாயப் பாடங்களாகும். பல ஆண்டுகளாக தாய்மொழிப் பள்ளிகள் மாணவர்களிடையே இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் போதித்து வந்திருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் அறிவாற்றல் மிக்க எத்தனையோ நிபுணத்துவ வல்லுநர்களை தாய்மொழிப் பள்ளிகள் உருவாக்கித் தந்திருக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக தேசியப் பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் தாய்மொழிப் பள்ளிகள் பேணி வந்திருக்கின்றன” எனவும் டோங் ஜியாவ் சோங் வலியுறுத்தியது.
“தாய்மொழிப் பள்ளிகளால் தேசிய ஒற்றுமை பாதிக்கப்படாது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம். தேசிய ஒற்றுமை பாதிப்பிற்கான அடிப்படைக் காரணம் நியாயமற்ற, இனப்பாகுபாடு கொண்ட பாரபட்சமான கொள்கைகளின் செயலாக்கம் தான்” எனவும் டோங் ஜியாவ் சோங் இயக்கங்களின் கூட்டறிக்கை தெரிவித்தது.
புங்க் மொக்தார் சர்ச்சையால் சபா தேசிய முன்னணி சீன வாக்குகளை இழக்குமா?
“தேசிய நிலைத் தலைவர்கள் எப்போதும் தேசிய அளவிலான ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமையின்மை மக்களிடையே ஆரம்பப் பள்ளிகளில் இருந்து தொடங்குகின்றது.மாணவர்களை இளம் வயதிலேயே தேசியப் பள்ளிகள், தாய்மொழிப் பள்ளிகள் எனப் பிரிப்பதால் ஒற்றுமையின்மை அந்த இடத்திலிருந்து வளர்கிறது, இது யாருக்கும் புரிவதில்லை” என்று புங்க் மொக்தார் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) கூறியதாக பிரி மலேசியா இணைய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
“மாணவர்களை பள்ளிகளுக்குப் பிரித்து அனுப்புகிறோம். ஆறு ஆண்டுகள் அவர்கள் அங்கே படிக்கிறார்கள். அதன் பின்னர் நாம் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம். ஆனால், பிரிவினை ஆரம்பப் பள்ளிகளிலேயே தொடங்கி விடுகிறது” என்றும் புங்க் மொக்தார் கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசிய பின்னர் இது குறித்து புங்க் மொக்தார் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தார். “நான் தாய்மொழிப் பள்ளிகளை மூடச் செல்லவில்லை. காரணம் மலேசியா பல இன சமூகங்களைக் கொண்டதாகும்” எனவும் விளக்கமளித்திருக்கிறார்.
சபா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் தேசிய முன்னணிக்குத் தலைமையேற்று வழிநடத்த புங்க் மொக்தார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எனினும் அவரது தலைமைக்கு அம்னோவிலிருந்தும், தேசிய முன்னணியில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான அவரது கருத்துகள் சபா மாநில சீன சமூகத்தினரிடையே கண்டனத்தைத் தோற்றுவிக்கும் –
தேசிய முன்னணிக்கு ஆதரவான அவர்களின் வாக்குகளை இழக்கச் செய்யும் – எனவும் கருதப்படுகிறது.