Home One Line P1 “தாய்மொழிப் பள்ளிகளால்தான் ஒற்றுமை குலைகிறது” – புங்க் மொக்தார்

“தாய்மொழிப் பள்ளிகளால்தான் ஒற்றுமை குலைகிறது” – புங்க் மொக்தார்

733
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான புங்க் மொக்தார் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

சபா அம்னோவின் தலைவருமான புங்க் மொக்தார் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருபவர். மீண்டும் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை உதிர்த்திருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை பிரி மலேசியா டுடே இணைய ஊடகம் வெளியிட்ட செய்தியில் புங்க் மொக்தார் இவ்வாறு பேசினார் என செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

“தேசிய நிலைத் தலைவர்கள் எப்போதும் தேசிய அளவிலான ஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமையின்மை மக்களிடையே ஆரம்பப் பள்ளிகளில் இருந்து தொடங்குகின்றது” என்று புங்க் மொக்தார் கூறியிருக்கிறார்.

மாணவர்களை இளம்வயதிலேயே தேசியப் பள்ளிகள், தாய்மொழிப் பள்ளிகள் என பிரிப்பதால் ஒற்றுமையின்மை அந்த இடத்திலிருந்து வளர்கிறது, இது யாருக்கும் புரிவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“மாணவர்களை பள்ளிகளுக்குப் பிரித்து அனுப்புகிறோம். ஆறு ஆண்டுகள் அவர்கள் அங்கே படிக்கிறார்கள். அதன் பின்னர் நாம் ஒன்றுபட  வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம். ஆனால், பிரிவினை ஆரம்பப் பள்ளிகளிலேயே தொடங்கி விடுகிறது” என்றும் புங்க் மொக்தார் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசிய பின்னர் இது குறித்து புங்க் மொக்தார் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தார். “நான் தாய்மொழிப் பள்ளிகளை மூடச் செல்லவில்லை. காரணம் மலேசியா பல இன சமூகங்களைக் கொண்டதாகும்” எனவும் விளக்கமளித்திருக்கிறார்.

அவரது கருத்துகளை மறுத்து சமூக, அரசியல் இயக்கங்களின் பிரதிநிதிகள் பதிலடி அறிக்கைகள் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சபா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் தேசிய முன்னணிக்குத் தலைமையேற்று வழிநடத்த புங்க் மொக்தார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எனினும் அவரது தலைமைக்கு அம்னோவிலிருந்தும், தேசிய முன்னணியில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான அவரது கருத்துகள் சபா மாநில சீன சமூகத்தினரிடையே கண்டனத்தைத் தோற்றுவிக்கும் –

தேசிய முன்னணிக்கு ஆதரவான அவர்களின் வாக்குகளை இழக்கச் செய்யும் – எனவும் கருதப்படுகிறது.