கோத்தா கினபாலு: சபாவில் பிரச்சாரம் செய்யும் போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மொகிதின் யாசின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்த வேண்டும் என்று பெர்சே தேர்தல் கண்காணிப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்று பிரதமர் மொகிதின் யாசின் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் 60 மில்லியனுக்கும் அதிகமான உதவிக்கான பிரதி காசோலையை வழங்கியதைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை அது முன்வைத்துள்ளது.
“தேசிய கூட்டணிக்கு இணங்க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க, சபாவில் வாக்காளர்களை கவர்வதற்காக மொகிதின் தனது நிலைப்பாட்டையும் அரசாங்க வளங்களையும் தெளிவாகப் பயன்படுத்தியது உறுதியாகிறது ” என்று பெர்சே கூறியது.
“மொகிதினின் ஊழல் குறித்து விசாரிக்க எம்ஏசிசியை கேட்டுக் கொள்கிறோம். தம் நிலைப்பாட்டையும், அரசாங்க வளங்களையும் வாக்குகளுக்காகப் பயன்படுத்துகிற அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று, பியூபோர்டில் நடந்த புக்கிட் ஹுமா உரம் மற்றும் விஷ மானியத் திட்ட நிகழ்வில் மொகிதின் கலந்து கொண்டார். இதில் கிளியாஸின் தேசிய கூட்டணி வேட்பாளர் இஸ்னின் அலியாஸ்னியும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், 60 மில்லியனுக்கும் அதிகமான உதவிக்கான பிரதி காசோலை வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் உதவியை மொகிதின் அறிவித்தார்.