(25 செப்டம்பர் 2020-ஆம் நாள் “செல்லியல் பார்வை காணொலி” தளத்தில் இடம் பெற்ற “அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?” எனும் தலைப்பிலான காணொலியின் கட்டுரை வடிவம்)
அந்தக் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:
செல்லியல் பார்வை | Anwar’s new government formation : What is MIC’s stand? | 25 September 2020;
அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?
பரபரப்பான சூழ்நிலையில் அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான வலுவான நாடாளுமன்ற பெரும்பான்மை தனக்கு இருப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புதன்கிழமையன்று (செப்டம்பர் 23) அதிரடியாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற ஆருடங்கள் எழுந்துள்ளன.
இதுவரையில், இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மஇகா, அன்வாரின் புதிய அரசாங்கத்தை ஆதரித்து இணையுமா என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த கேள்விக்கான விடையை அடுத்த இரண்டொரு நாட்களில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மத்திய செயலவை ஒப்புதலுடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கவலைப்பட ஒன்றுமில்லை” – சரவணன்
நேற்று புதன்கிழமை ஊடக உலகில் அன்வாரின் அறிவிப்பு வெளியிடப்பட்டு கொண்டிருக்க,
அதை கண்டும், கேட்டும் பொதுமக்கள் மத்தியில் சலசலப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்க,
அதே நேரத்தில், புத்ரா ஜெயாவில் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது.
அந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தனது முகநூலில் கீழ்க்காணுமாறு பதிவிட்டார்:
“கவலைப்படுவதற்கு எதுவுமில்லை, நான் இப்போது அமைச்சரவை சந்திப்புக் கூட்டத்தில் உள்ளேன். மக்களுக்காக திட்டமிடுவதில் மும்முரமாக பிரதமருடன் செயல்பட்டு வருகிறோம்”
சரவணன் மஇகாவின் துணைத் தலைவருமாவார். தேசியத் தலைவர் விக்னேஸ்வரனிடமிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
தற்போது மஇகாவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக சரவணன் இருக்கின்றார். மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு மஇகா ஆதரவு தெரிவித்து இருக்கிறது.
அந்த அடிப்படையில், ஒரே இந்திய அமைச்சராக சரவணன் மொகிதின் யாசின் அமைச்சரவையில் மனித வள அமைச்சராக இடம் பெற்றிருக்கிறார்
அன்வார் ஆட்சி அமைப்பதற்கான வலுவான மிகப்பெரிய பெரும்பான்மையை கொண்டிருப்பது உண்மையென்றால்,
அத்தகைய பெரும்பான்மை பலத்திற்கு மஇகாவின் ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆதரவு தேவைப்படாது. முக்கியமுமில்லை.
மேலும் பிகேஆர் எப்போதுமே அதிகமான இந்திய உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சி நாங்கள்தான் எனக் கூறி வருகிறது.
மஇகாவைவிட அதிகமான இந்திய உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பிகேஆர் திகழ்வதாக பலமுறை அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
பிகேஆர் சார்பில் சில இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.
இந்நிலையில் அன்வார் இப்ராகிம் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம், மஇகாவை ஒதுக்கிவிட்டு பிகேஆர் கட்சியின் இந்திய அமைச்சர்களைக் கொண்ட ஆட்சியாக இருக்குமா?
அல்லது, அனைத்துத் தரப்பு இந்தியர்களின் ஆதரவையும் பெறும் நோக்கில் மஇகாவையும் அன்வார் புதிய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வாரா?
கேள்விகள் எழுந்திருக்கின்றன!
துன் ரசாக் பாணியிலான ஒற்றுமைக் கூட்டணியா?
1974 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் தேசிய முன்னணி என்ற மாபெரும் ஒற்றுமைக் கூட்டணியை உருவாக்கினார்.
1969 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரங்களினால் நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்தது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த துன் ரசாக் தேசிய முன்னணி சித்தாந்தத்தை முன்னெடுத்தார்.
பாஸ், பிபிபி, கெராக்கான் போன்ற அப்போதைய எதிர்க்கட்சிகளையும் அந்தக் கூட்டணியில் இணைய வைத்தார்.
அன்வார் இப்ராகிம் அமைக்கவிருக்கும் புதிய அரசாங்கமும் இதே பாணியில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காரணம் மலாய்-முஸ்லிம் ஆட்சி என்றும் சீனர்களைப் பிரதானமாக கொண்ட ஜசெகவை ஒதுக்கவேண்டும் என்றும் அண்மைய சில மாதங்களாக தீவிரப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக, மலேசியர்கள் இடையே இன ஒற்றுமை மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டது. அதனை சீர் படுத்தும் விதமாக அன்வார் இப்ராகிம் அமைக்கும் அரசாங்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது அரசாங்கம் மலாய் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கமாக இருக்கும் என அன்வார் அறிவித்திருக்கிறார்.
அனைத்து இனங்களையும் பிரதிபலிக்கும் அரசாங்கத்தை அமைப்பேன் என்றும் தனது அறிவிப்பில் அவர் கோடி காட்டினார்.
இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து மஇகா அன்வாரின் அரசாங்கத்தை ஆதரிக்க முன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மலேசிய அரசியலில் இன்றைய சூழலில் எதுவும் சாத்தியமே என்ற நிலைப்பாட்டைத்தான் எல்லாக் கட்சிகளும், அரசியல்வாதிகளும் கொண்டிருக்கின்றனர்.
மஇகா முன்வந்தால் அன்வார் தரப்பில் அதற்கு உரிய மரியாதையும் இடமும் வழங்கப்படும் என்றும் அமைச்சரவையில் கூட இடம் கிடைக்கலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.
அதற்கேற்ப, அன்வாரை ஆதரிக்கும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் தடை செய்யமாட்டோம் என அம்னோ-தேசிய முன்னணி தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்திருக்கிறார்.
சாஹிட்டின் அறிவிப்பைத் தொடர்ந்து மஇகா இனி சுதந்திரமாக, தன்னிச்சையாகச் செயல்பட்டு சொந்த முடிவை எடுக்குமா?
அல்லது தேசிய முன்னணி-அம்னோ-மசீச தலைவர்களோடு இணைந்து ஒருமித்த முடிவை எடுக்குமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகாணும் முன்பாக,
முதலில் அன்வார் தன்னைச் சந்திக்க மாமன்னர் அனுமதி தர வேண்டும்!
தான் அறிவித்ததுபோல் தெளிவான, மிகப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பலத்தை மாமன்னரிடத்திலும்,
பின்னர் மக்கள் மன்றத்திலும் அன்வார் நிரூபிக்க வேண்டும்!
அதன் பின்னரே மஇகா நிலைப்பாடு என்ன என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை தெரியும் அளவுக்கு மலேசிய அரசியல் களம் தெளிந்த நிலைக்கு வரும்!