கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையான பொருளாதார, நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனம் தனது ஜப்பான் நாட்டு வணிக நடவடிக்கைகளை உடனடியாக மூடுவதாக அறிவித்தது.
கோலாலம்பூர் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றின் வழி ஏர் ஆசியா தனது இந்த தனது முடிவை அறிவித்தது.
ஏற்கனவே, இத்தகை முடிவு எடுக்கப்படும் என ஊடகச் செய்திகள் தெரிவித்தன. எனினும் ஏர் ஆசியா சார்பில் இந்தச் செய்தி மறுக்கப்பட்டது.
ஏர் ஆசியாவின் துணை நிறுவனமான ஏர் ஆசியா ஜப்பான் நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் வாரியத்திற்கும் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஏர் ஆசியா தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
ஏர் ஆசியா ஜப்பான் எடுத்திருக்கும் இந்த முடிவைத் தாங்கள் மதிப்பதாகவும் அந்த முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் ஏர் ஆசியா தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் ஏர் ஆசியா ஜப்பான் நிறுவனத்தினால் ஏற்பட்டு வந்த செலவினங்களைக் குறைக்க முடியும் எனவும் ஏர் ஆசியா கருதுகிறது.
கொவிட்-19 பாதிப்புகளால் ஜப்பானில் தொடர்ந்து இயங்குவதற்கு ஏர் ஆசியா கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தது.