Home One Line P2 ரோய்ஸ் பார்மா : கொவிட்-19 தடுப்பு மருந்து விநியோகத்தில் ஈடுபடுகிறது

ரோய்ஸ் பார்மா : கொவிட்-19 தடுப்பு மருந்து விநியோகத்தில் ஈடுபடுகிறது

658
0
SHARE
Ad
டத்தோ சந்திரசேகர் சுப்பையா

கோலாலம்பூர் : கடந்த 34 ஆண்டுகளாக நாட்டில் இயங்கி வரும் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் ரோய்ஸ் பார்மா இண்டிகிரேடட் பெர்ஹாட். இதன் நிருவாகத் துணைத் தலைவராக செயலாற்றுபவர் டத்தோ சந்திரசேகர் சுப்பையா.

அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையிலும் நாட்டின் வணிகத் துறையிலும்  தீவிரமாக ஈடுபாடு காட்டி வெற்றிகரமாக வலம் இந்திய வணிகப் பிரமுகர்களில் ஒருவர் சந்திரசேகர் சுப்பையா.

அவர் பங்குதாரராகவும் இருக்கும் ரோய்ஸ் பார்மா நிறுவனம், 100-க்கும் மேற்பட்ட மருந்துகளைத் தயாரிப்பது விநியோகிப்பது போன்ற வணிகங்களில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தடுப்பு மருந்துகளுக்கான தயாரிப்பு, விநியோகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒப்பந்தம் ஒன்றில் ரோய்ஸ் பார்மா அண்மையில் கையெழுத்திட்டுள்ளது. இதற்காக ரோய்ஸ் பார்மா கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஹோங் செங் கொன்சொலிடேடட் பெர்ஹாட் (Hong Seng Consolidated Bhd) என்ற நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது.

இதற்கு முன்னர் எம்எஸ்சிஎம் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MSCM Holdings Bhd) என்ற பெயரில் கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனம் தற்போது பெயர் மாற்றம் கண்டு ஹோங் செங் கொன்சொலிடேடட் பெர்ஹாட் என்ற பெயரில் இனி பங்குச் சந்தையில் இயங்கி வரும்.

ஹோங் செங், ரோய்ஸ் பார்மா இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய கூட்டு வணிக நிறுவனம் சீனாவின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபோசுன் நிறுவனத்தின் மருந்து தயாரிப்புகளை உள்நாட்டில் விநியோகிப்பது, தயாரிப்பது போன்ற வணிக செயல்பாடுகளில் இனி ஈடுபடும்.

சீனாவில் இயங்கி வரும் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஷங்காய் ஃபோசுன் பார்மசுடிகல் குரூப் கம்பெனி லிமிடெட் (Shanghai Fosun Pharmaceutical Group Co Ltd). ஃபோசுன் நிறுவனம், மருந்து தயாரிப்பு, தடுப்பு மருந்துகள் உருவாக்கம் ஆகிய வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.

ஃபோசுன் தற்போது கொவிட்-19 தடுப்பு மருந்து உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஃபோசுன் நிறுவனம் ஜெர்மனியின் பையோஎன்டெக் (BioNTech) நிறுவனத்துடனும், அமெரிக்காவின் பிஃபிசர் (Pfizer) நிறுவனத்துடனும் இணைந்து கொரொனா தடுப்பு மருந்துகளுக்கான இறுதிக்கட்ட பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

எனவே, ஃபோசுன் தயாரிக்கவிருக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்துகளை மலேசியாவில் விநியோகிக்கும் வாய்ப்புகளை இனி ரோய்ஸ் பார்மா-ஹோங் செங் இணைந்த கூட்டு வணிக நிறுவனம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.