Home One Line P2 இந்தியாவில் தீபாவளி இணைய வணிகத்திற்கு குறிவைக்கும் நிறுவனங்கள்

இந்தியாவில் தீபாவளி இணைய வணிகத்திற்கு குறிவைக்கும் நிறுவனங்கள்

615
0
SHARE
Ad

புதுடில்லி : அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய இணைய வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் இந்த ஆண்டு கொவிட்-19 அச்சம் காரணமாக பேரங்காடிகளுக்குச் சென்றும், வணிகச் சந்தைகளுக்குச் சென்றும் பொருட்களை வாங்கும் நடைமுறையிலிருந்து மக்கள் பின்வாங்குவார்கள். அதற்குப் பதிலாக இணையம் வழியே தங்களின் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசோன் ஆகிய இரு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மிகப் பெரிய அளவிலான இணைய வணிகங்களை நடத்துகின்றன. அவர்களோடு போட்டியில் குதித்திருக்கிறது உள்நாட்டு நிறுவனமான ஜியோமார்ட். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனம் இதுவாகும். ஏராளமான நிதிக் கையிருப்பை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இப்போதைக்கு இந்த மூன்று நிறுவனங்கள்தான் முன்னணி போட்டியாளர்களாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு இணைய வணிகம் இந்தியாவில் 34 விழுக்காடு உயர்ந்து 6.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவிலேயே தொடங்கப்பட்ட உள்ளூர் நிறுவனம் ஃபிளிப்கார்ட். 2018-இல் இந்திய சந்தையில் சுமார் 31.9 விழுக்காட்டை ப்ளிப்கார்ட் கைப்பற்றியது. அந்த காலகட்டத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனம்தான் மிகப் பெரிய வணிகச் சந்தையை இந்தியாவில் கொண்டிருந்தது.

அதே ஆண்டில் அந்நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வால்மார்ட் வாங்கியது.

இந்தியாவில் நீண்டகாலமாக கால் பதித்து வரும் அமேசோன், பிளிப்கார்ட்டுக்கு அடுத்த நிலையில் 31.2 விழுக்காட்டு சந்தையை இந்தியாவில் கைப்பற்றியிருக்கிறது.

இந்தியாவின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த இணைய வாணிப நிறுவனமாக அமேசோன் ஆய்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இப்போதைய நிலையில் பிளிப்கார்ட், அமேசோன் இரண்டுமே சரிசமமாக இணைய வாணிபத்தில் போட்டியில் நிற்கின்றன.

தீபாவளி சமயத்தில் இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான போட்டி மேலும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிப் பருவத்துக்கென அதிகமான தேவைகளைச் சமாளிக்க சுமார் 700,000 பணியாளர்களை பிளிப்கார்ட் அமர்த்தியுள்ளது.