Home One Line P1 செர்டாங் இலக்கிய வட்டம் : மறைந்த எழுத்தாளர் எல்.முத்துவின் வழியில் நடைபோடுகிறது

செர்டாங் இலக்கிய வட்டம் : மறைந்த எழுத்தாளர் எல்.முத்துவின் வழியில் நடைபோடுகிறது

942
0
SHARE
Ad

செர்டாங் : செர்டாங் புத்ரா பல்கலைக்கழகத்தில் சாதாரண ஊழியராக வாழ்வைத் தொடங்கிய எல்.முத்து ஓர் எழுத்தாளராக தனது முத்திரையைப் பதித்தவர். பின்னர் தனது பணியில் இருந்து விலகி, கடும் உழைப்பால் கட்டுமானத் துறையில் வெற்றிக்கொடி நாட்டினார்.

செர்டாங் இலக்கிய வட்டத்தை உன்னத தொலைநோக்கோடு தோற்றுவித்தவரும் அவர்தான். தொழிலதிபரும் எழுத்தாளருமான அவர் செர்டாங் இலக்கிய வட்டத்தின்வழி பல இலக்கிய பணிகளை முன்னெடுத்தார். ஆ.நாகப்பன், கு.கிருஷ்ணன் ஆகியோரோடு தாமும் இணைந்து ‘தேடல்’ சிறுகதைத் தொகுப்பு நூலை எல்.முத்து வெளியிட்டார்.

அதன் மூலம் திரட்டப்பட்ட பெரும் தொகையைக் கல்விப் பணிக்காகச் செலவிட்டார். பல ஆண்டுகளாக செர்டாங் வட்டார மாணவர்களுக்குக் அதனைக் கல்வி நிதியாக எல்.முத்து வழங்கி வந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு, அவர் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் அ.இராஜன் தலைமையேற்று செர்டாங் இலக்கிய வட்டத்தை திறம்பட வழிநடத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

அதற்குச் சான்றாக இரண்டு நிகழ்ச்சிகள் அண்மையில் சிறப்பாக நடைபெற்றன.

நாவல் ஆய்வரங்கம்

முதலாவதாக நாவல் ஆய்வரங்கம். சு.வெங்கடேசன் எழுதிய 1400 பக்க ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ சிறந்த நாவல் என்பதால் மலேசியாவில் பலரும் அதனை வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டது செர்டாங் இலக்கிய வட்டம்.

கொரோனா தொற்றுநோயால் மக்களின் நடமாட்டம் முடங்கிய நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோரை நாவலை வாசிக்கத் தூண்டியதோடு அண்மையில் அந்த நாவல் ஆய்வரங்கத்தையும் கோலாலம்பூரில் சிறப்பாக நடத்தி முடித்தது செர்டாங் இலக்கிய வட்டம்.

நூல்கள் அன்பளிப்பு

அடுத்து எஸ்பிஎம் மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு. இவ்வாண்டு பெட்டாலிங் பெர்டானா, பெட்டாலிங் உத்தாமா ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த 44 இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் 519 தமிழ் மாணவர்கள் எஸ்பிஎம் தமிழ்மொழியில் தேர்வெழுத உள்ளனர்.

அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழ்மொழி வழிகாட்டி நூல்களை அண்மையில் அன்பளிப்பாக செர்டாங் இலக்கிய வட்டம் வழங்கியது.

எழுத்தாளரும் ஆசிரியருமான ந.பச்சைபாலன் இந்நூலை எழுதியுள்ளார்.
பூச்சோங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செர்டாங் இலக்கிய வட்டத்தின் தலைவர் அ.இராஜன் உரையாற்றினார். “தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என நாம் போராடுகிறோம். ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் ஆறாண்டு கல்வி முடித்து இடைநிலைப்பள்ளிகளுக்குப் போகும் தமிழ் மாணவர்களுள் குறைந்தது மூவாயிரம் மாணவர்கள் ஒவ்வோராண்டும் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழித் தேர்வுக்கு அமருவதில்லை. இதற்கான காரணங்களை ஆராய வேண்டும். சிக்கல்களைக் களைய முனைய வேண்டும்” என அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

ந.பச்சை பாலன்

“எல்.முத்து கண்ட கனவை நிறைவேற்றுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தரமான இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தி வாசிக்கத் தூண்டும் இலக்கியப் பணியோடு ஒதுங்கி விடாமல் மாணவர் தலைமுறைக்குக் கைகொடுத்து அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க எங்களால் இயன்றதைத் தொடர்ந்து செய்வோம்.
இன்றைய சூழலில், கொரோனா தொற்றுநோயால் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களின் அன்பு வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் இவ்வாண்டு எஸ்பிஎம் தமிழ்மொழித் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி நூலை வழங்குவது மனநிறைவைத் தருகிறது” என அ.இராஜன் குறிப்பிட்டார்.

இந்நூல் மாணவர்களின் மீள்பார்வைக்கு பயனாக இருக்கும் எனவும் தொடர் நடவடிக்கையாக எஸ்பிஎம் மாணவர்களுக்கு தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, பெருமனதுடன் நிதி வழங்கி, நூல் அன்பளிப்புத் திட்டம் நிறைவேற உதவிய நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நூல்கள் அன்பளிப்பு வழங்கும் இத்திட்டத்திற்கு உதவிய நன்கொடையாளர்களான ரெ. சுப்ரமணியம், டையனா கேட்டரஸ் உரிமையாளர் சாமி, செர்டாங் ஜெயா பிரிண்டிங் உரிமையாளர் பன்னீர் செல்வம்@ அப்பு, புத்திரா பல்கலைக்கழக விரிவுரைஞர் டாக்டர் வீரமோகன், ம.இ.கா பூச்சோங் தொகுதி காங்கிரஸ் தலைவர் தொழிலதிபர் தமிழ்ச் செல்வம், கிள்ளான் ஆசிரியை நிர்மலாதேவி, காஜாங் ஶ்ரீமுருகன் நிலைய முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான சுப்ரமணியம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெட்டாலிங் பெர்டானா, பெட்டாலிங் உத்தமா மாவட்டங்களின் தமிழாசிரியர்கள் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுக்கொண்டனர். தங்களின் அன்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்திய செர்டாங் இலக்கிய வட்டத்திற்கும் ஆதரவளித்த நன்கொடையாளர்களுக்கும் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டிக் கருத்தரங்கினை நடத்த முன்வந்ததற்கும் மாவட்ட தமிழாசிரியர்களின் சார்பாக அதன் பொறுப்பாசிரியர் திருமதி பாமா நன்றி தெரிவித்தார்.