கோலாலம்பூர்: நீர் விநியோகத் தடைக்குக் காரணமாக அமைந்த நதி நீரை மாசுபடுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, குற்றவாளிகளுக்கு எதிராக அதிகபட்ச அபராதமாக 1 மில்லியனை மாநில அரசு முடிவு செய்யும் என்று கூறினார்.
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத்தில், சிலாங்கூர் நீர் ஆணையம் (லுவாஸ்) சட்டம் 1999- இல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு இது சாத்தியமாகும்.
இந்த மாதத்தில் சிலாங்கூரில் நதி மாசுபாடு கண்டறியப்பட்ட இரண்டாவது வழக்குக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை பாதித்தது.
எதிர்கால மாசுபாட்டைத் தடுக்க நதிப் படுகைகளில் அதன் 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு ஆயர் சிலாங்கூருக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.
மொத்தம் 20 முழுநேர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கடமைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடைக் காரணமாக நீர் கட்டணத்தில் தள்ளுபடி தேவை என்று கூறி பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்தனர். மற்றவர்கள் பகிரங்கமாக மந்திரி பெசாரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டனர்.