கோலாலம்பூர்: பத்து சாபி மற்றும் சரவாக் மாநிலத்தில் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவிக்க மத்திய அரசு மாமன்னரை கோரலாம் என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் புத்ராஜெயா இந்த திட்டத்தை பரிசீலிக்க முடியும் என்று அவர் கூறினார். இது மத்திய அரசியலமைப்பிற்கு ஏற்ப உள்ளது என்றும் அவர் கூறினார்.
“இது அவசியம் என்று நினைத்தால், அரசாங்கம் அதைப் பற்றி சிந்திக்கக்கூடும். அரசியலமைப்பைப் பொறுத்தவரை, அதைச் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார், அரசியலமைப்பின் 150 வது பிரிவு, முழு நாட்டிலும் அல்லது அதன் ஒரு பகுதியிலும் அவசரநிலையை அறிவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கு உண்டு என்று கூறுகிறது.
பத்து சாபி இடைத்தேர்தல் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும். சரவாக் மாநிலத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்ற இடங்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்ட 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசியலமைப்பு கூறுகிறது.