கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,103 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,102 ஆகும். வெளிநாட்டிலிருந்து ஒரே ஒரு தொற்று மட்டும் பீடிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து 4-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவாகியிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 48,520 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்று 821 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 35,606 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளில் பெரும்பாலானவை கிள்ளான் பள்ளத்தாக்கில் மொத்த எண்ணிக்கையில் 49.3 விழுக்காடு என்ற அளவில் பதிவாகியிருக்கின்றன. சபா 26.1 விழுக்காடு தொற்றுகளையும் பேராக் 10.5 விழுக்காடு தொற்றுகளையும் பதிவு செய்திருக்கிறது.
கோலாலம்பூரில் டாமன்லீலா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானப் பகுதியில் மட்டும் 385 தொற்றுத் திரள்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இதுவரையில் இந்தக் கட்டுமானப் பகுதியில் 1,132 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
பேராக்கிலும் திடீரென தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கெடா, அலோர்ஸ்டார் சிறையிலிருந்து பரவிய தெம்போக் என்ற தொற்றுத் திரள் மூலம் 111 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
காஜாங் பேருந்து நிலையத்திலிருந்து பரவிய ஹெந்தியான் என்ற புதிய தொற்றுத் திரள் மூலம் இதுவரை 83 தொற்றுகள் பரவியிருக்கின்றன.
இன்னமும், 12,601 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 102 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 39 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று 4 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 313-ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவல்களை சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.