அலோர் ஸ்டார்: கெடாவில் மேலும் ஒரு கோயில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1) இடிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் கோலா கெடா, தாமான் பெர்சாத்துவில் அமைந்துள்ள ஒரு கோயில் இடிக்கப்பட்டதை அடுத்து, கெடா மஇகா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள மஇகா இளைஞர் பொது புகார்கள் பிரிவின் தலைவர் டத்தோ சசிதரன், இக்கோயில் இடிக்கப்பட்டதற்கு அமலாக்கத் தரப்பினர் பொய் விளக்கங்களைக் கூறி உள்ளது வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“அலோர் ஸ்டார் ஊராட்சி மன்றத்திடம் கேட்கப்பட்ட போது, உத்தரவு மாநில மந்திரி பெசார் அலுவலகத்திலிருந்து வந்ததாகத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்புக் கொண்ட போது, கோயில் இடிக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தக் கோரி உத்தரவு வழங்கப்பட்டதாகவும், ஊராட்சி மன்றம் பிடிவாதம் பிடித்து கோயிலை இடித்துள்ளதாகக் கூறுகிறது. இது அனைவரையும் ஏமாற்றும் உக்தி. இறுதியில் இந்து மதத்தினர் பாதிக்கப்படுகின்றனர்,” என்று சசிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியர்கள் விவகாரங்களுக்கான மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி இதில் சரியாக செயல்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவரின் உத்தரவும், அறிக்கைகளும் பொருட்படுத்தப்படவில்லை. வெறுமனே அவர் அப்பதவில் உள்ளார். இதுவே அவர் கெடா மாநில இந்தியர்களுக்கு உதவும் முறை என்றால், செயல்படாத இம்மாதிரியான அதிகாரிகள் தேவையில்லை,” என்று அவர் சாடியுள்ளார்.
கெடாவில் இந்தியர்களுக்கு மரியாதை இல்லாத சூழலை இது உண்டாக்கி உள்ளதாக அவர் கூறினார். இதற்கு முன்னர் அலோர் ஸ்டாரில், இரயில் நிலையம் அருகே இருந்த கோயில் ஒன்று நள்ளிரவில் அமைதியாக இடிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
“கெடாவில் மதங்களுக்கான மரியாதை இல்லை. இந்து மதத்தினர் காவல் துறையில் புகார் ஒன்றை அளிக்க உள்ளனர். மந்திரி பெசார் இந்தியர்களின் பல்வேறு விவகாரங்களில் இழுபறியாக பணியாற்றுகிறார். இதே போக்கு தொடர்ந்தால், பல்வேறு மதங்களக் கொண்ட கெடாவில், அமைதி நிலை பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.