சென்னை : பரபரப்படைந்து வரும் தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
அதைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் 13-ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் ரஜினிகாந்த் தனது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கத் தொடர்ந்து தனது கட்சியினருடன் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதி ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கும் நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு பல பிரபலங்கள் மோதும் தேர்தலாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் அமையவிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இன்னொரு கோணத்தில் திமுக, அதிமுக மோதல்கள் அதிகரித்துள்ளன. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
எதிர்வரும் ஜனவரி தொடங்கி, பரப்புரைகள், கூட்டணி அமைப்பு, என பல்வேறு முனைகளில் தமிழகத்தின் அரசியல் களம் மேலும் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.