கோலாலம்பூர் : நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியரும், அறிவாற்றல் மிகுந்த பொருளாதார நிபுணராகவும் உலக அளவில் பார்க்கப்பட்டவருமான அரசப் பேராசிரியர் உங்கு அப்துல் அசிஸ் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 98.
உங்கு அசிஸ் முன்னாள் பேங்க் நெகாராவின் ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் அசிசின் தந்தையுமாவார்.
1922-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி இலண்டனில் பிறந்தவர் உங்கு அசிஸ். பொருளாதார அறிஞர், பல்கலைக் கழக வேந்தர், பேராசிரியர், எழுத்தாளர், விளையாட்டாளர் என பன்முகத் தன்மையுடன் கல்வி உலகில் உலா வந்தவர் அவர்.
நாட்டின் முன்னணி பல்கலைக் கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்தின் முதல் மலேசிய துணை வேந்தராக நியமிக்கப்பட்ட உங்கு அசிஸ் அந்தப் பதவியை மிக நீண்ட காலத்திற்கு வகித்த பெருமைக்குரியவருமாவார்.
மலாய் சமூகத்தின் முதல் பொருளாதார நிபுணர் என்ற பெருமையும் அவருக்குண்டு.
நாட்டில் அரசப் பேராசிரியர் என்ற கௌரவத்தைப் பெற்ற ஒரே பேராசிரியராகவும் அவர் திகழ்ந்தார்.
அவரது நீண்ட கால அரசாங்கப் பணிகளில் பல்வேறு சாதனைகளை அவர் புரிந்துள்ளார். டேவான் பகாசா டான் புஸ்தாகா, தாபோங் ஹாஜி என்ற ஹாஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான வாரியம், அங்காசா என்ற தேசியக் கூட்டுறவுக் கழகம் போன்ற அமைப்புகளைத் தோற்றுவித்ததில் அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
ஜோகூர் பாரு ஆங்கிலக் கல்லூரி, பத்து பகாட் மலாய்ப்பள்ளி, ஆகியவற்றில் கல்வி கற்ற அவர் சிங்கப்பூரின் ராபிள்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
பல்வேறு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்புகளில் ஆலோசகராகப் பணியாற்றிய அவர் மலேசியாவின் சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த 50-க்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.