கோலாலம்பூர் : பிஎன்பி எனப்படும் தேசிய முதலீட்டுக் கழகத்தின் (பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்) தலைவராக இருந்துவரும் செத்தி அக்தார் அசிஸ் அந்தப் பதவியிலிருந்து எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியோடு விலகவிருக்கிறார்.
அன்று நடைபெறவிருக்கும் பிஎன்பி நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தோடு அவர் பதவி விலகுகிறார். அந்தத் தேதியோடு செத்தியின் மூன்றாண்டு கால தவணையும் ஒரு முடிவுக்கு வருகிறது.
தனது பதவியில் நீடிக்க விரும்பவில்லை என செத்தி பிரதமர் மொகிதின் யாசினிடம் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.
அதே போன்று பிஎன்பி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் தனது பதவி விலகலை செத்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநருமான (கவர்னர்) செத்தி அக்தார் குடும்பத்தினர், 1எம்டிபி விவகாரத்தில் பணம் பெற்றதாகவும் மறைந்து வாழும் வணிகர் ஜோ லோவிடமிருந்து பணம் பெற்றதாகவும் அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதை செத்தி அக்தார் மறுத்து வருகிறார். எனினும் அவர் மீதான விசாரணைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நஜிப் துன் ரசாக்கும் செத்தி அக்தார் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
நஜிப் ஆட்சிக் காலத்தில் பேங்க் நெகாரா எனப்படும் மத்திய வங்கியின் ஆளுநராக செத்தி அக்தார் செயல்பட்டு வந்தார். மிக நீண்ட காலத்திற்கு அவர் அந்தப் பதவியில் நீடித்து வந்தார்.
பின்னர், செத்தி அக்தார் அந்தப் பதவியிலிருந்து விலகினார். துன் மகாதீர் பிரதமரானதும் மீண்டும் செத்தி அக்தார் அரசாங்கத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான மாறினார்.
தொடர்ந்து பிஎன்பி எனப்படும் தேசிய முதலீட்டுக் கழகத்தின் தலைவராக செத்தி அக்தாரை மகாதீர் நியமித்தார்.
தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக பிரதமரிடம் செத்தி அக்தார் தெரிவித்துவிட்டார் என்றும் தனது அலுவலகப் பணியாளர்களிடமும் பதவி விலகல் குறித்து தெரிவித்திருக்கிறார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.