கோலாலம்பூர் : (இன்று புதன்கிழமை டிசம்பர் 16-ஆம் தேதி மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பத்திரிகைச் செயலாளர் எல்.சிவசுப்பிரமணியம் தொகுத்து வழங்கியிருக்கும் இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)
2018-ஆம் ஆண்டில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பொதுத் தேர்தலில் மோசமான தோல்விகளைச் சந்தித்திருந்த நிலையில், 60 ஆண்டு காலமாக மத்திய அரசாங்கத்தில் வகித்த அமைச்சுப் பதவிகளையும், அதிகாரங்களையும் இழந்து நின்றது மஇகா.
அந்த நேரத்தில் மஇகாவின் 9-வது தேசியத் தலைவராக தனது 53-வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டார் விக்னேஸ்வரன்.
இன்று அவரது தலைமைத்துவம் இரண்டு ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில், அவர் தனது ஐம்பத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் நாளில் விக்னேஸ்வரனின் சாதனைகள் சிலவற்றையும், கட்சியை அவர் எவ்வாறு வழிநடத்துகிறார் – அந்தக் கட்சி பிரதிநிதிக்கும் இந்திய சமூகத்தை எந்தக் கோணத்தில் எந்தப் பாதையில் சீரமைத்து மாற்றிக் கொண்டு செல்கிறார் என்பது குறித்தும் கண்ணோட்டமிடுவது பொருத்தமாக இருக்கும்.
துணிவு- தெளிவு – மன உறுதி
கடந்த இரண்டு ஆண்டுகளில் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் துணிவு, தெளிவு, மன உறுதி ஆகிய மூன்று அம்சங்களை வெளிப்படையாக முன்வைத்து கட்சியை வழிநடத்தும் பாணி கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
மஇகாவின் தலைமைத்துவப் பொறுப்பேற்றுக் கொண்டபோது பல மாநில அரசாங்கங்களின் ஆட்சிக் குழுவில் மஇகாவுக்கு இடம் கிடைக்கவில்லை. மத்திய அரசாங்கத்திலும் எந்த பதவியும் இல்லை.
விக்னேஸ்வரன் மட்டும் நாடாளுமன்ற மேலவையில் அவைத் தலைவராக பதவியில் தொடர்ந்தார்.

இந்நிலையில் அரசாங்கத்தை சார்ந்தே கட்சியை வளர்ப்பது, சமுதாயத்தை வழிநடத்துவது என்ற சிந்தனையை மாற்றியமைத்தார் விக்னேஸ்வரன். கடந்த கால தலைவர்கள் உருவாக்கி வைத்த கட்சியின் சொத்துடமைகளை ஒருமுகப்படுத்தினார். அதன் மூலம் கட்சியை பொருளாதார பலம் வாய்ந்த அமைப்பாக உருமாற்றினார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தையும், கல்வி மையங்களையும் நடத்திவரும் எம்ஐஇடி அறக்கட்டளை அமைப்பின் தலைமைமைத்துவப் பொறுப்பேற்றார். அதன் நடவடிக்கைகளை மஇகாவின் வழிகாட்டுதலோடும், மக்களுக்கு நலன் பயக்கும் கல்வித் திட்டங்களை வழங்கும் விதத்திலும் மாற்றியமைத்தார்.
கடந்த காலங்களில் எத்தனையோ பொருளாதாரத் திட்டங்கள் கூட்டுறவுக் கழகங்கள், தனியார் வசம் சென்று சேர்ந்து, அதனால் மஇகாவும் இந்திய சமுதாயமும் சந்தித்த இழப்புகளை அவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் எம்ஐஇடி அமைப்பு கட்சியோடும், இந்திய சமுதாயத்தின் சொத்தாகவும் என்றும் பிணைந்திருக்கும் வகையில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
நீண்ட நாளாக சர்ச்சையில் இருந்த மஇகா தலைமையகத்தின் பக்கத்து நிலத்தின் சட்ட சிக்கல்களைத் தீர்த்து அதனையும் மஇகாவின் முழு உடமையாக்கினார் விக்னேஸ்வரன்.
இன்றைக்கு அந்த நிலத்தில் 40 மாடி கட்டிடம், தங்கும் விடுதி, பிரம்மாண்டமான மண்டபம் ஆகிய வசதிகளோடு அந்த நிலத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்கள் வரையப்பட்டு கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இருக்கும் கட்சியின் சொத்துடைமைகளை முறைப்படுத்தி, கட்டமைப்பை நிலைநிறுத்தியது விக்னேஸ்வரனின் முதல் கட்ட தலைமைத்துவ வெற்றி எனக் கூறலாம்.
இதைத்தொடர்ந்து கட்சியிலும், இந்திய சமூகத்திலும் அவரது தலைமைத்துவ ஆற்றல் மீதான நம்பகத்தன்மையும் அதிகரித்தது.
கட்சியின் கதை முடிந்தது அவ்வளவுதான் என்று கொக்கரித்து நின்றவர்கள் வாய்மூடி மௌனமாக நிற்கின்றார்கள்.
மஇகா இனி வேண்டாம் என்று பிரிந்து சென்றவர்கள் இன்று மீண்டும் வந்து இணைந்து கொள்கிறோம் என்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கிறார்கள். புதியவர்கள், இளைஞர்கள் மஇகாவின் வலிமையையும், அரசியல் தேவையையும் உணர்ந்து கட்சியில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து இன்று சுமார் நான்காயிரம் கிளைகளோடு சற்றும் வலிமை இழக்காமல், மக்கள் ஆதரவு குறையாமல் உறுதியான ஆலமரமாக தழைத்தோங்கி நிற்கிறது மஇகா.
துணிச்சலான முடிவுகள்
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் மீண்டும் தேசிய முன்னணி வழி மத்திய அரசாங்க ஆட்சியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமர்ந்தது மஇகா. நமக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுத் தந்தார் விக்னேஸ்வரன்.
கட்சியின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அமைச்சுப் பொறுப்பில் இருந்து அரசாங்கப் பணிகளைக் கவனிக்க, இந்திய சமுதாயத்தை தூரநோக்குச் சிந்தனையோடு அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விக்னேஸ்வரன்.
கடந்த காலங்களைப் போல் கட்சிக்குள் அணிகளை உருவாக்காமல், தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்துக் கொள்ளாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்வது விக்னேஸ்வரனின் தலைமைத்துவச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களைப் போல் இறுதி நேரத்தில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்ற குழப்பமில்லாமல் இப்போதே மஇகா தனக்கான தொகுதிகளை அடையாளம் காண்பதோடு, அதற்கான தொகுதி ஒருங்கிணைப்பாளர்களையும் நியமித்து தேர்தல் களப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார் விக்னேஸ்வரன்.
இந்திய சமூகத்திற்கான உரிமைக் குரலாக ஒலிக்கிறார்
மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்றவுடன் கொவிட்-19 பாதிப்பால் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் சிக்கிக் கொண்டு தவித்த நமது இந்திய சமூக சகோதரர்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு தங்களின் அன்பான குடும்பத்தினரும் இணைத்த சாதனையையும் விக்னேஸ்வரன் செய்து முடித்தார்.
எப்போதும் அரசாங்கத்தையே நம்பியிராமல், தன் கையே தனக்குதவி என்ற தாரக மந்திரத்தோடு, இன, மத பேதமின்றி, இந்தப் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டார் விக்னேஸ்வரன். கட்சியின் உதவியோடும், சில நல்லுள்ளங்களின் ஒத்துழைப்போடும் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் மலேசியர்களும் தனி சிறப்பு விமானங்களில் அலை அலையாக தாயகம் திரும்பிய காட்சிகளை நாடு கண்டது.
ஆலய உடைப்பு விவகாரத்தில் கெடா மந்திரி பெசாரின் முரண்பாடான கருத்துகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார் விக்னேஸ்வரன். கொஞ்சமும் தயங்காமல், விக்னேஸ்வரன் ஆலய விவகாரத்தில் கெடா மந்திரி பெசாரை எதிர்த்துக் கையாண்ட விதம் அவரது துணிச்சலையும், இந்திய சமூகத்தின் உரிமைகளுக்கான குரல் எப்போதும் ஓயப் போவதில்லை என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்தது.

மஇகாவையும், இந்திய சமூகத்தையும் சொந்தக் கால்களில் கௌரவத்தோடு நிற்க வைக்க வேண்டும், மஇகாவை அனைத்து இந்தியர்களின் வலிமையான, நிலையான அரசியல் தளமாக உருமாற்ற வேண்டும், நமக்கான உரிமைகளை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனைகளோடு கட்சியையும், இந்திய சமூகத்தையும் வழிநடத்திக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரனின் எண்ணங்கள் ஈடேற நாமும் இணைந்து நமது பங்கை வழங்க முன்வருவோம்.
அவரது பணிகளும், இலக்குகளும் வெற்றியடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறுவோம்.