கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் எந்நேரமும் நடக்க இருக்கும் நிலையில், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் காரிம், எதிர்க்கட்சிகள் விரைவாக அதன் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உடன்பட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
“நீண்ட காலம் காத்திருக்க முடியாது. உடனே சரிசெய்ய வேண்டும், ” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார். ஆயினும், தாம் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை முன்மொழிவதாக ஹசான் கூறினார்.
“எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
2021 வரவு செலவுத் திட்டம், நேற்று 111 வாக்குகள் ஆதரவாகப் பெற்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு, எதிராக 108 வாக்குகள் கிடைத்தன. பிரதமர் வேட்பாளர் முன்மொழிவை தாம் தமது சொந்த விருப்புக் கருதி வெளியிட்டதாகவும், ஜனநாயகப்படி இது நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.