கோலாலம்பூர்: மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் கடமையில் இருந்த அரசாங்க அதிகாரிகளால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான 3,919 அறிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) பெற்றுள்ளது.
இந்த எண்ணிக்கையில், ஜூலை மாதத்தில் 962 வழக்குகள் பதிவாகியுள்ளன. மே மாதத்தில் 275 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மார்ச் மாதத்தில் 510 புகார் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் 279, ஜூன் மாதத்தில் 758, ஆகஸ்டில் 542, செப்டம்பரில் 593 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த எண்ணிக்கையை பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசன், தெரசா கோக்கிற்கு எழுதிய எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், இந்த பதிலில் எம்ஏசிசிக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் குறித்த விவரங்களை எதுவும் வழங்கப்படவில்லை.
ஆகஸ்டில், சுங்கை புலோவில் சட்டவிரோத வணிக வளாகங்களை பாதுகாப்பதற்காக இலஞ்சம் வாங்கியதாக விசாரணையின் ஒரு பகுதியாக ஒன்பது ஷா ஆலாம் நகராட்சிமன்ற பணியாளர்கள் மற்றும் ஒரு வர்த்தகரை எம்ஏசிசி தடுத்து வைத்தது.