ஜோர்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு புதிய பயணிகள் சேவை முறை அமலில் இருக்கும்போது பயண நேரம் பாதியாக குறைக்கப்படும். பயணிகள் மிக விரைவான பயணத்தை அனுபவிப்பார்கள் என்று பினாங்கு போர்ட் செண்டெரியான் பெர்ஹாட் தலைமை அதிகாரி ராதி முகமட் உறுதியளித்துள்ளார்.
“இரண்டு வேகமான கப்பல்களில், ஒவ்வொன்றிலும் 200 பயணிகளில் செல்லலாம். இது அதிகபட்சமாக 10 நிமிடங்களும், சராசரியாக 15 நிமிடங்கள் வரை பயண நேர்த்தை உட்படுத்துகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 40 முறை இந்த கப்பல்கள் பயணத்தில் ஈடுபடும்,” என்று ராதி தெரிவித்துள்ளார்.
2022- ஆம் ஆண்டில் அறிமுகமாக இருக்கும் வாகனப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, 100 மோட்டார் சைக்கிள்களுக்கு இடமளிக்க முடியும் என்று ராதி கூறினார்.
126 ஆண்டுகள் பழமையான பயணக்கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து, பினாங்கு அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பயணக்கப்பல் சேவை தொடரப்படும் என்று அதன்பிறகு நிதி அமைச்சர் தெங்கு ஜாப்ருல் அறிவித்திருந்தார்.
அதன்பிறகு, போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் பயணக்கப்பல் சேவை சொன்னபடியே நிறுத்தப்படும் என்றும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் கட்டணம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் கூறினார்.