Home One Line P1 “சவால்களை எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவோம்” – விக்னேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்து

“சவால்களை எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவோம்” – விக்னேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்து

653
0
SHARE
Ad

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பல்வேறு சோதனைகளையும், கோவிட்-19 நோய்த்தொற்று மூலம் மனித சமுதாயத்திற்கு எண்ணற்ற வேதனைகளையும் வழங்கிவிட்டு, நம்மிடமிருந்து பிரிந்து செல்கிறது நம் அனைவராலும் மறக்க முடியாத 2020-ஆம் ஆண்டு.

கோவிட் -19 பாதிப்புகளால் ஏற்பட்ட எதிர்பாராத திடீர் மாற்றங்களால் பலர் வேலை இழந்ததும், அதன் காரணமாக பொருளாதார வீழ்ச்சியை தனிமனிதர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் எதிர்நோக்கியதையும் நாம் கண்கூடாகக் கடந்த ஆண்டில் கண்டோம்.

இப்போது புத்தாண்டில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்தப் புத்தாண்டு, விவேகமான புத்தாண்டாக, செழிப்பு மிக்க புத்தாண்டாக மாற்ற உறுதி கொள்வோம்.

#TamilSchoolmychoice

கடந்து போன சம்பவங்களின் மூலம் நாம் கற்ற பாடங்களை மனதில் இருத்தி, இந்த புத்தாண்டை, வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளும் வண்ணம் திட்டமிட்டு, பயன்மிக்க ஆண்டாக உருமாற்றுவோம்.

கடந்த காலம் போன்று எப்போதும் போல வாழ்க்கையை நடத்துவதையும், ஒன்றுமே நடக்காது என்பது போல அசட்டு தைரியத்தோடு எதையும் எதிர்கொள்வதையும் நாம் விட்டொழிக்க வேண்டும்.

கோவிட்-19 பாதிப்புகளின் தாக்கம் 2021-ஆம் ஆண்டிலும் தொடரும் என தொழில் நிபுணர்களும், ஆய்வாளர்களும் கணித்திருக்கின்றனர். எனவே, புதிய சிந்தனைகளோடும், புத்தாக்க அணுகுமுறைகளோடும் நாம் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

புதிய திட்டங்களை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். கூடுதல் வருமானங்களுக்காக புதிய பாதைகளைத் தேட வேண்டும். உதாரணமாக அரசாங்கத்தின் மூலமாக இலவசமாக வழங்கப்படும் பல்வேறு தொழில்கல்விப் பயிற்சிகளை நமது இந்திய சமூகத்தினர் நன்கு பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் அனைத்து மலேசியர்களுக்கும் கிடைப்பதற்கும் அதன் மூலம் இந்தத் தொற்றின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கமும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் பிரச்சனைகளை சமாளிக்க, மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் அரசாங்கமும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த வாய்ப்புகளையும் சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

2020-ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அரசாங்கத்தில் மஇகா இடம் பெற்றதையும் அறிவோம். கொவிட் பாதிப்புகளை எதிர்நோக்கிய இந்திய சமூகத்தினருக்கு பல முனைகளில் நமது கட்சி துணை நின்றது. உதவிகள் வழங்கியது. அயல் நாடுகளில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்ட ஆயிரக்கணக்கானோரை சிறப்பு விமானங்கள் மூலம் நாடு திரும்பச் செய்து அவர்களின் அன்புக்குரியவர்களுடன் சேர்த்து வைத்தோம்.

பிறக்கும் புத்தாண்டிலும் மஇகா, மலேசிய இந்திய சமூகத்தினருக்கு தாய்க் கட்சியாக இருந்து வழிநடத்துவதற்கும், அவர்களுக்குப் பிரச்சனைகள் எழுந்தால் தோள்கொடுத்து துணைநிற்பதற்கும், போராடுவதற்கும் தயாராக இருக்கிறது.

அரசாங்கத்தின் மூலமான நல உதவித் திட்டங்கள் இந்திய சமூகத்திற்கு முழுமையாகக் கிடைப்பதையும், நமது உரிமைகள் நிலைநாட்டப்படுவதையும் மஇகா உறுதி செய்யும்.

வாருங்கள் அனைவரும் ஒன்றிணைவோம். சவால்களை எதிர்நோக்கத் தயாராவோம். பிறக்கும் 2021-ஆம் ஆண்டில் அந்த சவால்களைச் சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம்.

அனைவருக்கும் வளமையான, சிறப்பான புத்தாண்டு அமைய எனது நல்வாழ்த்துகள்.

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்