சியோல் : அடுத்த தொழில்நுட்பப் புரட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் மின்சாரக் கார் தயாரிப்பு தொழிலில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனமும் இணைந்து ஈடுபடவிருக்கின்றன.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக ஹூண்டாய் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவிருக்கின்றன.
இதன்படி 2024 ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் மின்சார கார் தயாரிப்பு தொழிலில் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக ஈடுபடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே திறன்பேசிகள் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் முன்னணி வைக்கிறது.
பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய் கார் தயாரிப்பு தொழிலில் உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஈடுபட்டுவருகிறது.
மின்சாரக் கார் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக தானியங்கி மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படுவது 2027 ஆண்டில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காரில் ஓட்டுநர்கள் அமர்ந்து கொண்டு இயக்க, கார் தானியங்கி முறையில் செலுத்தப்படும் தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
இந்த செய்திகளைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகள் ஏறத்தாழ 20 விழுக்காடு வரை உயர்ந்து இருக்கின்றன.
முதல் கட்டமாக ஜார்ஜியா மாநிலத்தில் அமைந்துள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த கார் உற்பத்தி தொடங்கும். கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனமாகும்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் தொழிற்சாலை ஒன்றிலும் கார் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டமாக சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் 2024 ஆண்டில் தயாரிக்கப்படும். பின்னர் அமையவிருக்கும் புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு 400 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை திறனை கொண்டிருக்கும்.
அடுத்த ஆண்டிலேயே ஆப்பிள் ஹூண்டாய் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் காரின் பரீட்சார்த்த மாதிரிகள் வெள்ளோட்டத்திற்காக வெளியாகத் தொடங்கும் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிளின் தொழில்நுட்பம் மற்றும் அதன் மின்கல கொள்ளளவு (பேட்டரி) தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் சொந்தமாக மின்சாரக் கார் தொழிலில் ஈடுபட ஆப்பிள் முன்வந்திருக்கிறது.